டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு

🕔 May 15, 2023

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று வரை 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை நுளம்புகளின் இனப்பெருக்கத்தை மேலும் அதிகரிக்கிறது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மாதத்தின் முதலாவது வாரத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 1,954 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இவர்களில் 51.7 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கம்பஹாவில் இருந்து பதிவாகியிருந்தனர். அதன்படி, அந்த மாவட்டத்தில் 475 பேர் கண்டறியப்பட்டதாகவும், கொழும்பில் 412 பேர் பதிவாகியுள்ளதாகவும் அந்தப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நாடு முழுவதும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் பல அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகள், கொத்தட்டுவ, பிலியந்தலை, கடுவலை, மஹரகம, பத்தரமுல்லை, கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, நீர்கொழும்பு, பியகம, ராகம, ஜா-எல ஆகிய பகுதிகள் அதிக டெங்கு ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, தொற்று நோய் வைத்தியசாலை (IDH), கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (களுபோவில), லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, கண்டி தேசிய போதனா வைத்தியசாலை மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்