உத்தேச மறுசீரமைப்புக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்படுள்ளன: இவற்றில் சில மூடப்படும்
உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்களை நிதி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. இவை நஷ்டமடையும் நிறுவனங்களாகவும், லாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும் உள்ளன.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் – சில நிறுவனங்கள் விற்கப்படும்; சில மூடப்படும், சில இணைக்கப்படும் அல்லது மறுசீரமைக்கப்படும். இந்த செயல்முறை சுமார் இரண்டு மாதங்களில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில நிறுவனங்களின் நிர்வாகம் மேம்படுத்தப்படவுள்ளன.
430 நிறுவனங்களில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள், மற்றும் 173 சட்டப்பூர்வ சபைகளாக உள்ளன. கம்பனிகளில் 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் அடங்குகின்றன.
மேற்படி 430 அரச நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் – கடந்த ஆண்டு பல பில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நட்டத்தை சந்தித்த நிறுவனங்களின் விவரம் வருமாறு;
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 615 பில்லியன் ரூபா, இலங்கை மின்சார சபை 272 பில்லியன் ரூபா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 70 பில்லியன் ரூபா, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் 04 பில்லியன் ரூபா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை 03 பில்லியன் ரூபா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 01 பில்லியன் ரூபா.
இதேபோன்று அரச பொறியியல் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, தேயிலை சிறு தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் லங்கா லேலண்ட் (பிரைவேட்) லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களும் நட்டத்தை எதிர்கொண்டன.
மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சில் – பொது தனியார் கூட்டாண்மைக்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.