சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

🕔 May 12, 2023

– மப்றூக் –

‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது.

அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள்.

இவ்வாறானதொரு கதையை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நேற்றைய தினம் (11) தனது நாடாளுமன்ற உரையில் கூறியிருந்தார். அந்தக் கதை வெட்கக் கேடானதாகும்.

விடயம் இதுதான், “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்காக வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைத்திருக்கிறார். தமிழர்களுக்காக இந்தியா பேசுகிறது. அதேவேளை முஸ்லிம்களுக்காக இந்தியா பேச விரும்பவில்லை என்றால், சஊதி அரேபியாவை அழைத்து வந்து – முஸ்லிம்களுடன் ஜனாதிபதி பேசவேண்டுமென நாம் கூற வைப்போம்” என்று பைசல் காசிம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

கேலிக்குரிய பேச்சு

இந்தக் கூற்றை எந்தப் பட்டியலில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. ‘கடாபி கப்பல் அனுப்பி முஸ்லிம்களை காப்பாற்றுவார்’ என்கிற கதையை விடவும், பைசல் காசிம் எம்.பி யுடைய ‘கதை’ கேலிக்குரியதாகும்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் ‘அதறப் பதற’ எரிக்கப்பட்டபோது இங்கு வராத சஊதி அரேபியாவா, இப்போது வந்து ‘முஸ்லிம் எம்.பிகளுடன் பேசுங்கள்’ என்று ஜனாதிபதி ரணிலிடம் சொல்லப் போகிறது?

இப்படி உணர்ச்சிவசப்பட்டு, நடக்காத விடயங்களை, புத்திசாலித்தனமற்று நாடாளுமன்றத்தில் பேசுவது, நாட்டிலுள்ள பெரும்பான்மை இனவாதிகளுக்கு தீனி போடுவதாக மட்டுமே அமையும்.

இன்னொருபுறமாக, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து; ‘தமிழ் எம்.பிகளுடன் பேசுவது போல், முஸ்லிம் எம்.பிகளுடனும் பேசுங்கள்’ என்று சஊதி அரேபியாவை சொல்ல வைப்பதற்கான ஒரு சாத்தியம் இருந்தாலும் கூட, அதனை இப்படித் தம்பட்டம் அடித்துக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. காதும் காதும் வைத்தது போல், சஊதியிடம் பேசி, விடயத்தை முடிப்பதுதான் ராஜதந்திரமாகும்.

பைசல் காசிம் எம்.பிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட கால அனுபவம் உள்ளது. ஆனால், அந்த அனுபவத்தை வைத்து, நாடாளுமன்றில் ஒரு தரமான உரையை ஆற்றுவதற்கான தகுதியினை அவர் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

அவர் நேற்றையதினம் ஆற்றிய உரையின் விடயங்கள் மேலோட்டமாகவும், எழுந்தமானதாகவுமே இருந்தன. எடுத்துக்காட்டாக, “நான் நினைக்கிறேன், முஸ்லிம்களின் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன” என்று, பைசல் காசிம் அவரின் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

செயலாளர்கள் என்ன செய்கிறார்கள்?

நாடாளுமன்றம் போன்ற ஓர் உயர் சபையில் – தான் நினைப்பதையெல்லாம் பேச முடியாது. அங்கு பேசும் விடயங்கள் உண்மையானதாகவும், புள்ளி விவரம் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அங்கு எந்தவொரு புள்ளிவிவரங்களையும் சமர்ப்பித்து பைசல் காசிம் உரையாற்றியிருக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலாளர், அலுவலக உதவியாளர்கள் என பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதாந்தம் – அரசு சம்பளமும் வழங்குகிறது.

முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பைசல் காசிம் நேற்றைய தினம் உரையாற்றுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தால் – அந்த உரைக்கான தகவல்களை, புள்ளி விவரங்களை அவரின் செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தேடிப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இலங்கையில் காணாமல் போன முஸ்லிம்களின் எண்ணிக்கை 03 ஆயிரம் என்று தனது நேற்றைய உரையில் பைசல் காசிம் கூறியிருந்தார். அந்தத் தரவு எங்கிருந்து பெறப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவேயில்லை.

முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகமாக இப்படித்தான் உள்ளனர். தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடப்பதற்கான அறிகுறிகள் தெரியும் போது, ‘அவர்களுக்கு கொடுத்தால், அதுபோல் எங்களுக்கும் வழங்க வேண்டும்’ என்று கூக்குரல் எழுப்புவதே முஸ்லிம் பிரதிநிதிகளின் பழக்க தோசமாக உள்ளது.

2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக் காலத்தில், விடுதலைப் புலிகள் – இடைக்கால அதிகார சபையொன்றை கோரியிருந்தனர். அந்த சபை எவ்வாறு இருக்க வேண்டும், அதற்கான அதிகாரம் என்ன என்பதிலிருந்து அனைத்து விடயங்களையும், தாம் முன்வைத்த இடைக்கால அதிகார சபைக்கான முன்மொழிவில் புலிகள் விவரமாக குறிப்பிட்டிருந்தனர்.

இதன்போது, தங்களுக்கு என்ன தேவை என்பதை முன்வைப்பதற்கு – முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தரப்பிடம் சொந்தமாக எந்தவிதக் கோரிக்கைளும் இருக்கவில்லை. இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் எந்தவித எழுத்து மூல முன்மொழிவுகளையும் முஸ்லிம் தரப்பு தயாரித்திருக்கவில்லை. எனவே, ‘தமிழர்களுக்கு என்ன கொடுக்கிறீர்களோ அதை எங்களுக்கும் தாருங்கள்’ என்பதற்கு ஒப்பான கோரிக்கையினையே, அப்போது முஸ்லிம் அரசியல் பிரதிநிநிதிகள் முன்வைத்திருந்தனர். அது அப்போது புலிகளுக்கு முஸ்லிம்கள் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனவே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – உணர்ச்சியூட்டும் வகையில், வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று, செக்கிழுப்பது போன்ற பேச்சுக்களைத் தொடர்ந்தும் ஆற்றிக் கொண்டிராமல் – புத்திசாதுரியமாகவும், தரவுகளின் அடிப்படையிலும் நல்லிணக்கத்தை குலைக்காத வகையிலும் அதனை மேற்கொள்ள வேண்டும்.

‘பைசல் காசிம் போன்றோர் இலக்கின்றி கொழுத்தி எறியும் இவ்வாறான தீக்குச்சிகள், முஸ்லிம் சமூகத்தையே எரித்துவிடும் அபாயம் உள்ளது’ என்பதை, ஓர் எச்சரிக்கையாக இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்