அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

🕔 May 9, 2023

– அஹமட் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) மாலை, பாடசாலையில் நடைபெற்றது.

அறபா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிபர் எம்.ஏ. அன்சார் மற்றும் பாடசாலை ஆசியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அறபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுடைய முழுமையான நிதிப் பங்களிப்பில் கொள்ளவனவு செய்யப்பட்ட – பல லட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்களும், பாதணிகளும் இதன்போது தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

பொருளாதார நெருக்கடி மிகுந்த தற்போதைய காலகட்டத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான உதவிகள் – மிகவும் பெறுமதி வாய்தவை என்றும், முடிந்தளவு இது போன்ற உதவிகளை செய்வதற்கு முடியுமானவர்கள் முன்வர வேண்டுமென்றும், இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மத்துல்லா கோரிக்கை விடுத்தார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். நௌபர்டீன், எம்.ரி.எம். ஜனோபர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது அண்மையில் விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற அறபா வித்தியாலய மாணவி எம்.என். ஸீனத் ஸஹரா, 04ஆம் இடத்தைப் பெற்ற எம்.ஆர். சாஜித் ஆகியோர் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரினால் பாராட்டிக் கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அதிபர் அன்சாரின் அர்ப்பணிப்பான சேவையினைக் கௌரவித்து, அவருக்கு நினைவுப் பரிசொன்றினை பழைய மாணவர் பாயில் வழங்கி வைத்தார்.

பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்