எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை

🕔 January 20, 2016

Dr. Hafees - MP– மப்றூக் –

பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாசங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை – தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததாகவும், அப் பிரேரணையானது, நாடாளுமன்றத்தின் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று செவ்வாய்கிழமை தனது பதிவியை ராஜிநாமாச் செய்த முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் திடீரென தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்த டொக்டர் ஹபீஸிடம் சற்று முன்னர் பேசியபோதே அவர் மேற்கெண்ட தகவலைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். இது நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக எனக்கு வழங்கப்பட்ட ஒரு பொறுப்பாகும். மு.காங்கிரஸ் தலைவரின் உத்தரவின் பேரில், நேற்று காலை 10.30 மணியளவில் எனது ராஜிநாமாக் கடிதத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தேன்.

நான் பதவியில் இருந்த நான்கு மாதங்களில் இரண்டு முக்கியமான பிரேரணைகளை முன்வைத்திருந்தேன். முதலாவது, பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையாகும். மற்றையது, ஆசிரியர்களும் பாடசாலைகளிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களும் தமது கடமை நேரத்தில் தொலைபேசியில் உரையாடுவதற்கு தடை விதிக்கும் பிரேரணையாகும்.

மேற்படி இரண்டு பிரேரணைகளும் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்ததோடு, விவாதத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. இந்த நிலையில்தான் நான் ராஜிநாமாச் செய்துள்ளேன். இதனால், குறித்த பிரேரணைகள் விவாதத்துக்கு வரமாட்டாது.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்  நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் இல்லாத சில மாவட்டங்கள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில்தான் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பதவியை ராஜிநாமாச் செய்தேன்.

புதிய நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளில் அதிகமான கேள்விகளை சபையில் நான்தான் கேட்டிருந்தேன்.

நம்பிக்கைப் பொறுப்பின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, நான் வெறுமனே வைத்துக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குறுகிய காலத்துக்குள் முடிந்தளவு சமூகத்துக்காக சபையில் பேசியுள்ளேன்” என்றார்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐ.தே.கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பதவிகளில் இரண்டினை, அந்தக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கியது.

அவ்வாறு கிடைத்த தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களுக்கு யாரை நியமிப்பது என்கிற இழுபறி முஸ்லிம் காங்கிரசுக்குள் எழுந்தமையினால், இறுதித் தீர்மானமொன்றுக்கு வரும் வரையில், தமக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், மற்றும் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் ஆகியோரை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்தார்.

நேற்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்த டொக்டர் ஹபீஸ், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ஆவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்