காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது

🕔 May 6, 2023

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக மனைவியை கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டம் நியகம பிரதேச செயலகத்துக்கு அருகில், எல்பிட்டிய – பிடிகல மாபலகம பிரதான வீதியில்கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்தப் பெண்ணின் கணவர் – குறித்த விபத்துக்குக் காரணமானதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

இவர் தனது நண்பர் மூலம் அந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. விபத்தை அரங்கேற்றுவதற்காக சந்தேகநபர் – தனது நண்பருக்கு 02 மில்லியன் ரூபாவை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்த பெண் – சில காலம் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு இலங்கை திரும்பினார், அவரின் பெயரில் 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு ஆயுள் காப்புறுதிகள் இருந்தன.

காப்புறுதித் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேகநபர் தனது நண்பருடன் இணைந்து விபத்தைத் திட்டமிட்டுள்ளார்.

குறித்த பெண், தனது உறவினருக்காக வீதியில் – மோட்டார் சைக்கிளில் காத்திருந்தபோது அவர் மீது லொறியொன்று மோதியது.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தேக நபரின் நண்பரான லொறி சாரதி – சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், தற்போது பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்