நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை

🕔 May 2, 2023

– முனீரா அபூபக்கர் –

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு – மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் அமைச்சரவைப் பத்திரத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 38/16/01-06-1978ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நுவரெலியா மாநகர சபைப் பகுதியை நகரப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், நுவரெலியா பிரதேச சபைப் பகுதியும் நகரப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் இல. 154614/01-09-1998 மூலம் அறிவிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இப்பகுதியில் நடக்கும் முறைசாரா வளர்ச்சி, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகள், தரமற்ற குடிநீர், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் முறையான வடிகால் அமைப்பு இல்லாமையினால் நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருகிறது.
இப்பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதற்கு இது பெரும் தடையாக உள்ளது.

எனவே, நகரில் பாரிய கட்டடங்களை நிர்மாணிக்காமல் – சுற்றுலாப் பயணிகள் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் வகையில் இலகுவான சூழலுடன் திட்டங்களைத் தயாரிக்குமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தை செயல்படுத்தும் போது, அப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்