வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின
– அஷ்ரப் ஏ சமத் –
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வானங்களின் உதிதிரிப் பாகங்களைத் திருடும் இருவரையும், அவர்களிடிருந்து வாகனங்களின் உதிரிப் பாகங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் இரு வியாபாரிகளையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் இன்று (30) உத்தரவிட்டுள்ள்ளார்.
மேற்படி சந்தேக நபர்களை நேற்றிரவு வெள்வத்தைப் பொலிஸார் கைது செய்தனர்.
இது பற்றித் தெரியவருவதாவது;
மேற்படி நபர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடுவதோடு, சொகுசு வாகனங்களின் இருபக்க கண்ணாடிகளையும் திருட்டுத்தனமாக கழற்றி வந்துள்ளனர்.
சொகுசு வாகனங்களின் கண்ணாடிகளை திருடிக் கொண்டு செல்லும் இவர்கள், களவாடிய மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்து, ஒரு கட்டத்தில் அந்த மோட்டார் சைக்கிள்களை எங்கேயாவது கைவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இவர்கள் குற்றச் செயல்களில ஈடுபடும் போது, முற்றாக முகம் மூடிய தலைக்கவசம் அணிவது வழக்கமாகும்.
இந்த நபர்கள் கல்கிசை படோவிட்ட வீடமைப்புத் தோட்டத்தில் வசிப்பவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்படி நபர்கள் இருவரும் – வாகனங்களின் கண்ணாடிகளை திருடி – பஞ்சிகாவத்தையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பவர்களிடம் கொடுத்து 50 ஆயிரம் அல்லது 60 ஆயிரம் ரூபாவுக்கு அவற்றினை விற்று வந்துள்ளனர்.
இக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இருவரும் – போதைவஸ்துப் பாவனையாளர்கள் எனவும் தெரியவந்ததுள்ளது.
இந்த நிலையில் வெள்ளவத்தை குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று (29) இரவு 02 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மேற்படி இருவர் மீதும் சந்தேகம் கொண்டு வழிமறித்துள்ளனர். இதன்போது அவர்கள் அவ்வடத்திலேயே தாம் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆயினும் அவர்களை விரட்டிச் சென்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இவர்கள் திருடி கைவிட்டுச் சென்ற 10 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றினர்.
இவர்கள் இவதுவரை ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான வாகன உதிரிப்பாகங்களை களவாடியுள்ளனதாக விசாரைனையின்போது தெரியவந்துள்ளது.
இவ் இரு நபர்களிடமிருந்து களவுப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் இருவரும் இதனையடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவர்களை 14 நாடட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.