தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள், மீண்டும் அவர்களின் பணிக்குத் திரும்புவதற்கான அனுமதிமதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க வகும்புர இன்று (28) நாடாளுமுன்றில் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள தேர்தல் தொகுதிகளை தவிர்த்து, வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்கே அனுமதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
இதன்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ; வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள நிலையில், இன்னும் சம்பளக் கொடுப்பனவுகள் கிடைக்காத பலர் – வெவ்வேறு அரச துறைகளில் உள்ளனர் எனக் கூறினார்.
“அவர்களின் தவறுகளால் சம்பளம் கிடைக்காமல் போகவில்லை. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சமடைவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
“உங்களின் சுயநலத்துக்காக அவர்களின் சம்பளத்தை இல்லாமல் செய்வது நியாயமானதா? என, அமைச்சரை நோக்கி சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பினார்.