தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

🕔 April 25, 2023

– பாறுக் ஷிஹான் –

டக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை, அம்பாறை மாவட்டத்தில் வெற்றியளிக்கவில்லை.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ‘மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி ஹர்த்தாலை அனுஸ்டிப்போம். என, தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயல்பாட்டாளர்கள் இன்று ஹர்த்தாலுக்கு கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆயினும் அம்பாறை மாவட்டத்தில் வழமைபோன்று இன்றைய தினம் பொதுமக்கள் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டமையைக் காண முடிந்தது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பெரிய நீலாவணை, சவளக்கடை, சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, நிந்தவூர், மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் திறந்திருந்தன. வீதியோர வியாபாரங்கள் நடைபெற்றதோடு, வங்கிகள் மற்றும் சந்தைகளும் வழமை போன்று இயங்கின.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்