24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

🕔 April 21, 2023

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்திலும் முன்னிலையாகாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், முன்னாள் சட்டமா அதிபருக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினமும், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகவில்லை.

தற்போதைய சட்டமா அதிபருடனும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடத்தும் சந்திப்பு காரணமாகவும், இன்றைய தினம் முன்னிலையாக முடியாது என – முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, கடிதம் ஒன்றின் மூலம் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அறிவித்தார்.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, வாக்குமூலம் பெறுவதற்காக, நேற்று முன்தினம், பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் முன்னிலையாகவில்லை.

அவருக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் அங்கு முன்னிலையானார்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு விடுத்த அழைப்பு தொடர்பில் அவர் 07 பக்க எழுத்துமூல எதிர்ப்பை முன்வைத்தார்.

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னணியில், பாரிய சதித்திட்டம் இடம்பெற்றிருந்ததாகவும், அது தொடர்பில் அனைவரும் சாட்சிகள் ஊடாக கண்டறிய வேண்டும் என்றும் 2021ஆம் ஆண்டுதப்புல டி லிவேரா,கூறியிருந்தார்.

குறித்த கருத்து தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்றைய தினமும் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்