பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள்

🕔 April 9, 2023

– மரைக்கார் –

ள்ளிவாசல் நிர்வாகத்தை தெரிவு செய்வதுதொடர்பில் எழுந்த சர்ச்சை – சம்மாந்துறையில் உயிரொன்றைப் பலி வாங்கியிருக்கிறது.

‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்கள், ‘அழ்ழாஹ்வின் வீடு’ என்று கூறப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சண்டையிட்டு, மனிதப் படுகொலையொன்றறைப் புரிந்திருக்கின்றார்கள் என்பது எத்தனை பெரிய முரண்பாடு; எத்தனை பெரிய படுபாதகம்.

முரண்பாடுகளைத் தீர்த்து, நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரில் அதிகமானோர் – அடி, தடி, மல்லுக்குத் தயாரானவர்களாகவே இருக்கின்றனர்.

மருதமுனையில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் – ஒலிபெருக்கியின் சத்தம் அதிகமாக உள்ளது என்பதை பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு பல தடவை பொதுமகன் ஒருவர் எடுத்துக்கூறியுள்ளார். அதனை நிருவாகத்தினர் கணக்கெடுக்கவில்லை. கடைசியில், குறித்த நபர் – பொலிஸ் நிலையம் வரை சென்றிருக்கின்றார்.

பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பவர் முஸ்லிம் என்பதற்காக அவர்களுக்கு காதுகள் இல்லை என்று, பள்ளிவாசல் நிர்வாகம் நினைத்து விடக் கூடாது. இந்தத் தொந்தரவை – பள்ளிவாசலுக்கு அருகில் இல்லாதவர்களால் விளங்கிக் கொள்ளவும் முடியாது.

அந்தப் பொதுமகன் பொலிஸ் நிலையம் வரை செல்வதற்கு, குறித்த பள்ளிவாசல் நிருவாகத்தினரே முழுக் காரணமாவார்கள். பள்ளிவாசலின் ஒலிபெருக்கி சத்தத்தால் தனக்கு தொந்தரவு உள்ளதாக, அருகில் உள்ளவர் கூறினால், அது குறித்து மனிதாபிமானத்துடன் நிர்வாகம் நடந்திருக்க வேண்டும். அப்படி நடக்காத போதுதான், பாதிக்கப்பட்டவர் தனக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் நிலையைத்தை நாடியிருக்கிறார்.

மின்விசிறியை சுழல விட்டு குர்ஆன் ஓதியவரை தேடிவந்த பொலிஸ்

அட்டாளைச்சேனையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் – நோன்புடன் பகல் நேரத்தில் ஒருவர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். வெயில் காலம் என்பதால், பள்ளிவாசலின் மின்விசிறியை அவர் சுழல விட்டுக் கொண்டு குர்ஆன் ஓதியுள்ளார்.

மின்விசிறி ஓடுவதை பொறுக்க முடியாத நிருவாகத்திலுள்ள ஒருவர், முஅத்தினை அழைத்து – மின்விசிறியை நிறுத்துமாறு கூறினார். அதன்படி மின் விசிறிறை முஅத்தின் நிறுத்தியுள்ளார். இந்த நிகழ்வு அடிபிடி வரை சென்றது. கடைசியில் முஅத்தின் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு அழைக்க, பள்ளிவாசலுக்கு பொலிஸார் வந்தனர். பள்ளிவாசலில் குர்ஆன் ஓதியவரிடம் பொலிஸ் விசாரணை நடத்தியதாகவும் தெரியவருகிறது.

இதே பள்ளிவாசலில் மிக அதிக சத்தத்தில் ஒலிபெருக்கி பாவனை இருந்தது. இந்த சத்தம் பக்கத்திலுள்ள பலருக்கு கடும் கஷ்டத்தை ஏற்படுத்தியது. சத்தத்தைக் குறைக்குமாறு அருகிலுள்ள பொதுமகன் ஒருவர் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கூறினார். இது நிர்வாகத்தினருக்கு பிடிக்கவில்லை, அவர்கள் இன்னும் சத்தமாக ஒலிபெருக்கியில் தரவீஹ் தொழுகையினையும் ஒலிபரப்பினர்.

இந்த விவகாரமும் ஒரு பிரச்சினையில் முடியவிருந்தது. ஆனால், அந்தப் பள்ளிவாசல் நிர்வாகத்திலுள்ள படித்த இருவர் – நிலைமையை புத்திசாதுரியமாகக் கையாண்டு, ஒலிபெருக்கி சத்தத்தைக் குறைத்தமையினால் விவகாரம் முடிவுக்கு வந்தது.

அதே பள்ளிவாசலில் புதிய நிர்வாகத்தினர் – முஅத்தின் ஒருவரை தெரிவு செய்துள்ளனர். அவருக்கு முஅத்தினாக பணியாற்றிய எந்தவித முன் அனுபவங்களும் இல்லை. அவர் ‘அதான்’ சொல்வதில் ஏராளமான பிழைகள் உள்ளன. இதனை நிருவாகத்தினரிடம் ஜமாத்தார்கள் சுட்டிக்காட்டியபோது, பள்ளிவாசல் நிருவாகத்தினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “நாங்கள் நியமித்த முஅத்தினை குறை சொல்ல நீ யார்” என்கிற அடாவடி மனநிலையில், மறுநாள் குறித்த முஅத்தினை இமாமாக வைத்து மஃரிப் தொழுகையை நடத்தினர். அந்தத் தொழுகையில் “அல்லாஹு அக்குபர்” என்று ஆரம்பித்த முஅத்தின் – ஓதியதெல்லாம் ஒச்சரிப்புத் தவறாகவே இருந்ததாக பல மௌலவிகள் கூறினர்.

இதுவெல்லாம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அடாவடி மனநிலையின் வெளிப்பாடாகும். ‘இஸ்லாம்’ என்கிற பெயரில் மார்க்கத்தில் இல்லாதவற்றினையும், நாட்டுச் சட்டத்துக்கு முரணான விடயங்களையும் இவர்கள் செய்வது – கடைசியில் எங்குபோய் முடிந்திருக்கிறது என்று பாருங்கள்.

இப்போது பெரும்பாலான பள்ளிவாசல்களில் – தொழுகையை ஒலிபெருக்கியில் அதிக சத்தமாக ஒலிக்கச் செய்கின்றனர். இந்தச் சத்தம் பள்ளிவாசலில் இருந்து பல கிலோமீற்றருக்கும் அப்பால் தூரத்துக்கும் கேட்கிறது. அப்படியென்றல் அருகாமை வீடுகளில் உள்ளோரின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒலிபெருக்கி அடாவடி

ஒலி அளவு என்பது ‘டெசிபல்’ மூலம் கணிக்கப்படுகிறது. அதாவது வெப்பத்தை ‘செல்சியஸ்’இல் நாம் அளிவிடுவது போலாகும்.

மனிதன் கேட்பதற்குப் பாதுகாப்பான அளவுகளாக 50 முதல் 55 டெசிபல்களை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

அந்த வகையில் 65 – 70 டெசிபல் சத்தத்தை, சில மணி நேரம் தொடர்ந்து கேட்டு வந்தால், அது நமக்கு எரிச்சலூட்டும் இரைச்சலாக மாறி விடும். 85 டெசிபல் சத்தத்தை இரண்டு மணி நேரத்துக்கும், 100 டெசிபல் சத்தத்தை 15 நிமிடங்களும், 120 டெசிபல் சத்தத்தை 02 நிமிடங்களும் கேட்டால், அது நம் காதுகளின் கேட்கும் திறனைப் பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அட்டாளைச்சேனையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்த போது, அதனை அருகிலுள்ள வீட்டார் அளவிட்டுப் பார்த்தனர் (கட்டுரையின் இறுதியில் பார்க்க). அது 110 டெசிபல் சத்தமாக இருந்தது. அதாவது இந்த சத்தமானது ஒருவரின் கேட்கும் திறனில் உடனடியாகவே பாதிப்பை ஏற்படுத்தும் அளவானதாகும்.

அதே பள்ளிவாசலின் அருகிலுள்ள இன்னொரு வீட்டிலிருந்து அளவிட்டுப் பார்த்தபோது, அது 73 டெசிபல் சத்தமாக இருந்தது. (கட்டுரையின் இறுதியில் பாரக்க). இந்த அளவு சத்தமானது – நீண்ட காலத்தில் ஒருவரின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.

இரைச்சல் சத்தத்தை நம் காதுகள் கேட்கும் பொழுது அதிக அழுத்தம், இரத்த அழுத்தம், செவி கேளாமை, தூக்கமின்மை, சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. அதிக ஒலி மாசிற்கு உள்ளாகுபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, சக மனிதர்களின் மனநிலை, சுகாதாரம், நியாயம் என எவற்றினையும் கணக்கில் எடுக்காமல் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அடாவடியாக நடக்கும் போது, அது இறுதியில் பெரும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.

அதிக சத்தத்துடன் தமது பள்ளிகளின் ஒலி பெருக்கிகள் வேலை செய்தால்தான், தாங்கள் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்கள் எண்ணிக் கொள்வார்கள் என, பள்ளிவாசல் நிருவாகத்தினரில் அதிகமானோர் நினைத்துக் கொள்கின்றனர்.

தொழுகையை ஒலிபெருக்கிகளில் ஒலிக்க விடும் பள்ளிவாசல்களைக் காணும் போது, இந்தப் பள்ளிவாசல் ஒரு முட்டாள் கூட்டத்திடம் சிக்கியுள்ளது என்றுதான், படித்தவர்களும் சரியாக இஸ்லாத்தை கற்றுத் தெளிந்தவர்களும் நினைத்துக் கொள்வார்கள்.

எனவே, பள்ளிவாசல்களில் பெருமையடிக்கும் விதமாக காரியங்கள் ஆற்றுவதை விட்டு – விட்டு, அழ்ழாஹ்வுக்குப் பொருத்தமான விடயங்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

பெரும்பான்மையானவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை, பள்ளிவாசல்களில் அமுல்படுத்தத் தேவையில்லை. இஸ்லாம் என்ன கூறியுள்ளதோ அவற்றினை அமுல்படுத்தும் இடமாக பள்ளிவாசல்களை இனியாவது மாற்ற வேண்டும்.

பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகிலுள்ள வீட்டில் ஏற்படுத்தும் சத்தம் (110 டெசிபல்)
பள்ளிவாசல் ஒலிபெருக்கி அருகிலுள்ள வீடொன்றில் ஏற்படுத்தும் சத்தம் (73 டெசிபல்)

Comments