ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

🕔 April 6, 2023

னாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (06) தெரிவித்தார்.

“யார் என்ன சொன்னாலும் ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர். கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஜனாதிபதிக்கு ஆதரவளிப்போம்” என ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித கூறினார்.

“பலர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள், ஆனால் அவருடன் தேர்தலில் போட்டியிட சற்று தயக்கம் காட்டுகின்றனர்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியினர் தனித்தனியாகச் சென்றது கொள்கை வேறுபாடுகள் காரணமாக அல்ல. ஆனால் அவரது முடிவெடுக்கும் பாணியில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை”என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், ஜனாதிபதி நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என்ற கருத்து யதார்த்தமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சை ஏற்றுக்கொள்ளத் தயாரா என ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது; அரசியல் காரணங்களுக்காக அமைச்சு ஒன்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

“குறிப்பாக சுகாதாரத் துறை நெருக்கடி குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன். அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார்” என்றார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பற்றி குறிப்பிடுகையில், இந்தச் சட்டத்தில் சாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறிய ராஜித சேனாரத்ன, அதில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்