40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இடைநிறுத்த தீர்மானம்
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கிவ்ஆர் (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன.
இதற்கிடையில், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் செய்தியில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் தாங்கியில் 50% களஞ்சியக் கொள்ளளவை பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (06) காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.