கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

🕔 April 3, 2023

– முனீரா அபூபக்கர் –

கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக அமைச்சின் செயலாளரினால் தகுந்த முறைமையை தயாரிப்பதற்காக நிபுணர் தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கொழும்பு மாநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் தொடர்பில் நீண்ட தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை மேற்கொண்டு நிபுணர் தொழில்நுட்பக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ஆரம்பத் திட்டத்தின்படி திட்டத்தைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் சுமார் 2.125 பில்லியன் ரூபா செலவாகும். அத்துடன், இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 300 மெற்றிக் தொன் குப்பைகள் பொருளாதார ரீதியில் பயன்பெற முடியும் என சம்பந்தப்பட்ட குழு அறிக்கை காட்டியுள்ளது.

பொதுவாக, கொழும்பு நகரில் மாத்திரம் தினமும் 600 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. களனி பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து புகையிரதத்தில் அருவக்காலு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதார அமைப்பில் சேமிக்கப்படும்.

அருவாக்கலு பகுதியில் 265 ஏக்கர் பரப்பளவில் இந்த சுகாதாரமான குப்பை கொட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல ஏக்கர் பூங்காவாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அழகுபடுத்தப்பட்டிருப்பதும் சிறப்புக்குரியது.

அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் நிதி ரீதியாக லாபகரமான மற்றும் நிலையான முறையில் நடத்துவதற்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வணிக மாதிரியின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்Jf;F ஓரளவு லாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குப்பைகளை அருவக்காலு அறிவியல் பூர்வமான சுகாதாரக் கிடங்கில் வைப்பதன் மூலம் – சக்திக்குத் தேவையான இயற்கை எரிவாயுவையும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் நிலவும் குப்பை நெருக்கடிக்கு முறையான விஞ்ஞான ரீதியிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வை வழங்குவதற்காக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சுகாதாரக் கழிவுகளை சேமித்து வைப்பது வழமை என்றும், நாட்டின் குப்பை பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை வழங்கும் திட்டம் இது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்