நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாது: உச்ச நீதிமன்றின் வர்த்தமானி அறிவித்தலால் ஏற்பட்டுள்ள நிலை

🕔 April 2, 2023

நீதிமன்றங்களில் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிந்து கொண்டு வழக்குகளில் ஆஜராக முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் சட்டத்தரணிகளுக்கான நீதிமன்ற ஆடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தமானியின் அடிப்படையில் கறுப்பு, வெள்ளை, வெண்மை குறைந்த, சாம்பல் நிறம், மெல்லிய ஊதா நிறத்தில் சாரி மற்றும் ஜாக்கெட் அல்லது கறுத்த றவுசர் – வெள்ளை மேற்சட்டை (blouse) அல்லது கறுத்த ஸ்கேர்ட் – வெள்ளை மேற்சட்டை (blouse) என்பனவற்றை மாத்திரமே பெண் சட்டத்தரணிகள் அணிய முடியும் என, சட்டமாணி றாஸி முகம்மட் சுட்டிக்காட்டுகிறார்.

உச்ச நீதிமன்று இதற்கு முன்னர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க ஹபாயா அணிவதற்கான இயலுமை பெண் சட்டத்தரணிகளுக்கு இருந்தது.

முன்னைய வர்த்தமாணி அறிவித்தலில் Black gown/ cloak என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தியே – முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா என்பது நீண்ட gown என்ற அடிப்படையில் அணிந்து வந்தார்கள் என சட்டமாணி றாஸி கூறுகின்றார்.

ஆனால் கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில் அந்த வார்த்தை அகற்றப்பட்டிருப்பதனால், பெண் சட்டத்தரணிகளுக்கு இனி – ஹபாயா அணிந்து கொண்டு செல்லும் அனுமதி உச்ச நீதிமன்றத்தின் புதிய விதிகளின்படி இல்லாமல் போயுள்ளது.

இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

உச்ச நீதிமன்று வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விதிகளை மீறி,பெண் சட்டத்தரணிகள் ஹபாயாவை அணிந்து கொண்டு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஆஜராகும் போது, எதிர்த்தரப்பு அவரின் ஆடையைக் கேள்விக்குட்படுத்தி ஆட்சேபிக்கலாம் என, றாஸி முகம்மத் குறிப்பிடுகின்றார்.

“அதனால் பெண் சட்டத்தரணிகள் ஹபாயாவை அணிந்து கொண்டு நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதோ அல்லது சட்டத்தரணிகளின் இருக்கையில் அமர்வதோ முடியாமல் போகும்” எனவும் சட்டமாணி றாஸி விவரிக்கின்றார்.

இதேவேளை, பெண் சட்டத்தரணிகளின் ஆடை தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய விதிகளை உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்துவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக, சட்டத்தரணி ஏ.எல். ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

எனவே, ஹபாயா அணிந்துகொண்டு தமது கடமைகளைச் செய்கின்ற நாடுபூராகவுமுள்ள பெண் சட்டத்தரணிகளை 0777497979 எனும் தொலைபேசி இலக்கத்தைத தொடர்பு கொள்ளுமாறும் சட்டத்தரணி ஆசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்