கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு
– நூருல் ஹுதா உமர் –
கல்முனை பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்களில் இன்று (27) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன.
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதர் ஏ.எம். பாரூக் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதர் ஆகியோரால் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்த மூன்று பேர் மீது, உணவு சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
மக்களதும், பாடசாலை மாணவர்களதும் சுகாதாரத்தையும், உணவுச் சுகாதாரத்தையும் நடைமுறைப்படுத்தவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இவ்வாறான தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி இதன்போது கூறினார்.
இனிவரும் காலங்களில் பகல், இரவு நேரங்களிலும் உணவு நிலைய திடீர் பரிசோதனைகள் இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.