“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை
– நூருல் ஹுதா உமர் –
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்துக்குள் குப்பையை கொட்டி, விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவு பெற்றமையினை அடுத்து, அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘குப்பை நிரப்புத்தளம் ஒன்றுக்கான நிலத்தைக் கொள்வனவு செய்யுமாறு, கடந்த 10 வருடங்களாக மாநகர சபையில் கூறிவந்தோம். நிதி இல்லை என்றார்கள். மாநகர சபையின் வங்கிக் கணக்கில் இருந்த 02 கோடி ரூபாய் பணத்தினைக் கொண்டு, பணக்காரர்கள் விளையாடும் – உள்ளக விளையாட்டு மைதானத்தை அமைத்தார்கள். ஆனால் பொது விளையாட்டு மைதானத்தில் குப்பை கொட்டினார்கள்’ எனவும் சபீஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இயலாமைக்காரர்களாலும், சுயம் இல்லாமல் தந்தையின் உழைப்பில் காலம் கடத்துபவர்களாலும் எவ்வாறு மக்களை வழிநடத்த முடியும்? என்றும் – சபீஸ் தனது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
‘தேசிய காங்கரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம், அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானதுக்கு அருகிலுள்ள காணிகளை, ஏக்கருக்கு 3 லட்சம் பணம் கொடுத்து வாங்குவோம் என 2009 களில் கூறினோம். அதிகார போதையில் இருந்த அவர் – தனியார் காணிகளை அரசுடமையாக்கி, நஷ்டஈடாக 25000 ரூபாவினை வழங்க முற்பட்டார். அதனை காணி சொந்தக்காரர்கள் விரும்பவில்லை.
ஆனால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு முன்னால், ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குள் காணப்படும் தனது குடும்பத்தார் ஒருத்தரின் – ஒரு ஏக்கர் காணியினை, பிரதேச சபையின் நிதி 65 லட்சம் ரூபாவினைக்கொண்டு கொள்வனவு செய்ய வைத்தார்.
கொரோனா தொற்று தாண்டவம் ஆடிய சுமார் இரண்டுவருட காலப்பகுதியில் – மாநகர சபை உறுப்பினர்களை அழைத்து, மக்களுக்கு என்ன விதத்தில் களப்பணி செய்யவேண்டும்? எவ்வாறான உதவிகள் செய்திட வேண்டும்? என கலந்துரையாடுவதற்கு, ஒரு கூட்டத்தையேனும் கூட்டாத, ஒரேயொரு சபை – அக்கரைப்பற்று மாநகர சபைதான் என்பதில் வெட்கமடைகின்றேன்
எங்களைப்போன்று மக்களும் வேதனைப்பட்டார்கள் என்பதனை நாங்கள் அறிவோம்.
எமது இளைஞர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் உள்ளூரில் மாத்திரம் விளையாடுவார்கள் எனும் ஆதங்கத்தில், தேசிய ரீதியில் விளையாடக்கூடிய விதத்தில் கடின பந்து விளையாட்டுக்கான பயிற்சிக் கூடாரங்களை, அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அமைக்க முட்பட்டோம். அப்போது, அதனையும் தடுத்து நிறுத்திவிட்டு, இப்போது இறுதி நேரத்தில் மைதானத்துக்கு கதவு போடுகின்றவர்களின் காலம் முடிவடைந்துவிட்டது.
அக்கரைப்பற்றின் சில பகுதிகள் – தமது மாநகர சபை எல்லைக்குள் இல்லை எனக்கூறி, குடிநீர் இணைப்புக்கான அனுமதியினை வழங்க மறுத்த மாநகர சபைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்தோம். கடைசி நேரத்தில் – நீர் இணைப்பை பெறுவதற்கான அனுமதி கடிதத்தை தருகிறோம் வாருங்கள் என கூவி அழைத்தார்கள். இவ்வாறநான ஊழல் குரோதக்கார்களின் பிடியிலிருந்து மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்’ எனவும் சபீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.