மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

🕔 March 11, 2023

– புதிது செய்தியாளர் அஹமட் –

க்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை மாணவர் ஒருவர் – ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், பாடசாலை தரப்பினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்குகே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆம் திகதி ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்துக்கு அல் ஹிக்மா பாடசாலை அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் தரப்பினரையும் – அதே தினத்தில் சமூகமளிக்குமாறும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கல்வி கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவரை, அதே பாடசாலையைச் சேர்ந்த ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தாக்கியதாகவும், இதனால் குறிப்பிட்ட மாணவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் கடந்த 07ஆம் திகதி முறையிடப்பட்டது.

தொடர்பான செய்தி: மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்