“விலகப் போகிறேன் என்று கூறிய போது மறுத்த அதாஉல்லா, இப்போது முறையான விசாரணைகளின்றி விலக்கியுள்ளார்”: தவறை உணர்வார் என்கிறார் சபீஸ்

🕔 March 10, 2023

முறையான விசாரணைகளின்றி தன்னை கட்சியைவிட்டும் நீக்கியமை தொடர்பில், தன்னால் வழக்குத்தாக்கல் செய்து தடை உத்தரவு பெற முடியுமாக உள்ள போதும், அதனை தான் செய்ய விரும்பவில்லை என, அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தேசிய காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்த எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று (10) முதல்வர் அ. சக்கி அஹமட் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

தேசிய காங்கிரஸ் என்பது அதாஉல்லாவினதோ அல்லது தனி நபரினதோ சொத்து கிடையாது என இதன் போது குறிப்பிட்ட சபீஸ்; “அந்தக் கட்சியை நாங்கள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கினோம். இப்போது அக்கட்சியின் செயலாளராக அதாஉல்லா இருப்பதனால், கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளார். அவரின் பதவி மாறும்போது அக்கட்சி எங்களிடம்தான் வந்து சேரும்” எனவும் சபீஸ் கூறினார்.

“தேசிய காங்கிஸ் கட்சியை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஆரம்பித்த பின்னும் அவரோடு இருந்து இந்த ஊர் மற்றும் இப்பிராந்திய வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். இப்போது என்னையும் இடைநிறுத்தி அதாஉல்லா அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“கொரோனா முதலாவது அலை, இரண்டாவது அலைகளின் போது மக்களுக்கு பணிசெயாமல் மாநகரம் ஊமைச் சபையாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் அதாஉல்லாவுக்கும் எனக்குமான ஒரு கலந்துரையாடலின்போது, மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபையோர் முன்னுலையில் நான் கூறினேன். ஆனால் அதனை அதாஉல்லா ஏற்கமறுத்து விட்டார்” எனவும் சபீஸ் தெரிவித்தார்.

முறையாக விசாரணை செய்யாமல் தன்னை கட்சியைவிட்டு நீக்கியமை தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்து, தடை உத்தரவு வாங்க முடியும் என்றும், ஆனால் தான் அதனை செய்ய விரும்பவில்லை என்றும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

தேசிய காங்கிரசோடும் அதாவுள்ளாவோடும் ஒன்றாய் பயணித்த பசுமையான விடயங்களை இதன் போது நினைவுகூர்ந்து பேசிய சபீஸ், “அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன் அவருக்காக பிரார்த்திக்கின்றேன்” என்றார்.

“தேசிய காங்கிரஸ் கட்சி – ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும். மக்கள் மன்றில் எங்களுக்கான நீதி வழங்கப்படும்போது, தேசிய காங்கிரசின் தலைவர் அவருடைய தவறினை உணர்துகொள்வார்” எனவும் தெரிவித்தார்.

Comments