பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

🕔 March 4, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதிய தவிசாளரை நியமிப்பது தொடர்பாக தற்போது இரண்டு முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூத்த அரசியல்வாதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், சிவில் சமூகத்தில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் அந்த முன்மொழிவுகளில் கூறப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூடிய விரைவில் புதிய தவிசாளரை நியமிக்க உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்ட காரியவசம், ஏனைய கட்சிகளில் இணைந்துள்ள நபர்களின் கட்சி அங்கத்துவத்தை நீக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.

முதல் கட்டமாக, உள்ளூராட்சித் தேர்தலில் பிற கட்சிகளில் போட்டியிடும் தமது கட்சி உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்