தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

🕔 March 3, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான புதிய திகதி இன்று (03) அறிவிக்கப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடினர்.

நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக தலைவர், பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் – புதிய திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்ததையடுத்து, தேசிய தேர்தல் ஆணைக்குழு தனது அறிவிப்பை ஒத்திவைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் தேர்தல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதி அமைச்சின் செயலாளர் தடுத்து வைப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மேற்படி மனுவை, பிரிதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உட்பட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்பான கட்டுரை: உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்