‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

🕔 March 1, 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வியொன்றை தொடுத்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார்.

புலிகளின் தலைவருடைய மகள் உயிருடன் இருப்பதாகவும், அவரின் வாழ்வாதாரத்துக்காக நிதி சேகரிக்கப் போவதாகவும் கூறி, சுவிஸர்லாந்தில் சிலர் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தனர் என்றும், அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்த ஒருவர் – பிரபாகரனின் மகளை – தான் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபரின் மகளும் பிரபாகரனின் மகளும் ஒன்றாகப் படித்தவர்கள் எனவும் சித்தார்த்தன் கூறினார்.

“இதனையடுத்து சுவிஸர்லாந்திலிருந்து லண்டன் சென்ற அந்த நபர், பிரபாகரனின் மகள் என அறிமுகப்படுத்தப்பட்டவரிடம் பேசியதுடன், ‘உங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுத் தந்தவர் யார்’ என கேட்டுள்ளார்”.

”பிரபாகரனின் மகளுக்கு யார் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார் என்று சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்ற நபருக்குத் தெரியும். புலிகளின் பெண்கள் படையொன்றில் இருந்த ஒருவர்தான் பிரபாகரனின் மகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்”.

”அந்தக் கேள்விக்கு பிரபாகரனின் மகள் எனக்கூறப்பட்ட பெண், தவறான ஒரு பதிலை வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த நபர், இவ்விடயத்தை உடனடியாக சுவிட்ஸர்லாந்தில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தி, அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையை முறியடித்தார்”. எனவும் சித்தார்த்தன் எம்.பி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (28) நடந்த ஊடக சந்திப்பில் இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்