லெப்பை, மரைக்காயர், மாப்பிளை பரம்பரை: காயல்பட்டினம் மற்றும் கேரளாவிலிருந்து இலங்கை வந்த கதை

🕔 March 1, 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு பகுதியாக இதனை ‘புதிது’ வெளியிடும். இது பகுதி – 02 ஆக அமைகிறது

– கியாஸ் சம்சுடீன் –

ழாம் நூற்றாண்டில் அரபு வணிகர்கள் இலங்கை வந்து குடியேறி சோனக சமூகத்தை உருவாக்கியதை போலவே இந்தியாவிலும் குடியேறி அங்கும் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்கினர். அதன் பின்னர் முஸ்லீம்கள் இந்தியாவிலிருந்தும் இங்கு வந்து குடியேறினர்.

முன்னவர்கள் தங்களைச் ‘சோனகர்’ என்றும் பின்னவர்கள் தம்மைச் ‘சம்மங்காரர் ‘ என்றும் வேறு படுத்திக்கொண்டனர் .

ஆனாலும் 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த வேறுபாடு மெல்ல மெல்ல மறையத்தொடங்கியது. அறிஞர் சித்தி லெப்பை பின்வருமாறு குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. “1200 வருடத்துக்கு முன் அரபிகள் இலங்கைக்கு வந்து – காலி முதல் பேருவளை வரையிலும் குடியிருந்து வியாபாரம் செய்தார்கள். இப்படியிருக்கும்போது தென்னிந்தியாவில் உள்ள நாகூர், காரைக்கால், தொண்டி, காயல்பட்டணம் ஆகிய ஊர்களில் இருந்து இஸ்லாமானவர்களும் வியாபாரம் செய்வதற்காக வந்து குடியேறினார்கள். பின்பு அந்த அரேபியர்களின் சந்ததிகளும் தெற்கேயிருந்து வந்தவர்களும் வித்தியாசம் அறியக்கூடாதவிதமாக கலந்து விட்டார்கள்” ( அமீன் 1992 : 12 ).

இவ்விடத்தில் இந்தியா தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் அரபு முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றி அறிந்திருத்தலும் எமக்கு பிரயோசனமாக இருக்கும்.

கி.பி 1380 அளவில் ‘காயல்பட்டினம்’ என அறியப்பட்ட முன்னைய காயல் துறைமுக நகரம் – கொற்கைக்குத் தெற்கில் அமைந்துள்ளது. காயலுக்கு தெற்கில் வீரபாண்டிய பட்டினம் அமைந்துள்ளது. முதன்முதலாக கி.பி 633-இல் (ஹிஜ்ரி 12) அரேபிய இஸ்லாமியர்கள் காயலிலும் கேரளத்துக் கொடுங்களூரிலும் வந்து குடியேறியுள்ளனர்.

கி.பி 633 – 640 காலத்தில் முதன் முதலாகக் காயல்பட்டினம் கடற்கரையில் ‘கடற்கரை மசூதி’ கட்டப்பட்டது. இதே காலத்தில் ஒரு மசூதி கேரளத்துக் கொடுங்களூரிலும் கட்டப்பட்டது. இவ்விரண்டு மசூதிகளுமே இந்தியாவின் தொன்மையான மசூதிகளாக குறிப்பிடப்படுகின்றன.

ஆங்கில பதிவுகள் – கோரமண்டல் கடற்கரையில் உள்ள துறைமுகங்களை ‘மூர் துறைமுகங்கள்’ என்று விவரித்தன. இன்றைய கடலூர் ‘இஸ்லாமாபாத்’ என்றும் ‘போர்டோ நோவோ’ (பரங்கிப்பேட்டை) ‘முகமது பந்தர்’ (முகமது துறைமுகம்) என்றும் அறியப்பட்டதாக ‘கொரோமண்டல் முஸ்லீம்களின் கடல்சார் வரலாறு’ என்ற நூலில் டொக்டர் ராஜா முகமது கூறுகிறார்.

மரக்காயர்கள் (படகுக்காரர்கள்) மற்றும் லெப்பைகள் இருவரும் நிபுணத்துவம் வாய்ந்த கடற்படையினர் மற்றும் வணிகர்களாக இருந்தபோது, ராவுத்தர்கள் அரேபிய குதிரைகளின் வியாபாரிகளாக அறியப்பட்டனர்.

தமிழ் நாட்டில் அரேபியர்களின் இரண்டாவது குடியேற்றம் கி.பி 939இல் (ஹிஜ்ரி 327) எகிப்திலிருந்து வந்த இஸ்லாமியர்களால் ஏற்பட்டது. முகமது நபியின் பின் வந்த நான்கு கலிபாக்களின் வழித்தோன்றல்களே இங்கு வந்து குடியேறினர். காயல்பட்டினத்தில் மூன்றாவது குடியேற்றம் கி.பி 1284-ல் நிகழ்ந்துள்ளது. தற்போது இவ்வூரில் இஸ்லாமிய மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

கேரளாவின் கோழிக்கட்டின் இந்து ஆட்சியாளரான ஜாமோரின், முஸ்லிம்களை தனது கப்பல்களை இயக்கும்படி செய்தார். அரேபிய வணிகர்கள் மலையாளி பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர்களின் மகன்களில் ஒருவரையாவது முஸ்லிமாக வளர்க்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார்.

ஜாமோரினின் கடற்படைக்கு தலைமை தாங்கிய குஞ்சாலி மரைக்கார், போர்த்துகீசியர்கள் தனது இறையாண்மைக்கு சவால் விடுத்தபோது – தைரியமாக அவர்களை எதிர்கொண்டார். போர்த்துகீசியர்களால் துன்புறுத்தப்பட்ட உள்ளூர் தமிழ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மரைக்காயர்கள் வட இலங்கையிலும் படையெடுத்தனர்.

19ஆம் நூற்றாண்டில் – உடல் ரீதியாக தென்னிந்திய முஸ்லிம்களைப் போலவே இருந்த தமிழ் மொழி பேசிய பல ‘மூர்’கள், ‘லெப்பை’ அல்லது ‘மரைக்கார்’ அல்லது இரண்டையும் தங்கள் பெயர்களில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வைத்திருந்தனர். (உதாரணமாக சேகு லெப்பை மரைக்கார், முஹம்மது அலி மரைக்கார் மற்றும் அஹமது லெப்பை மீரா லெப்பை) என அமீர் அலி குறிப்பிடுகிறார்.

மேலும் “பெரும்பாலோர் கோரமண்டல் கடற்கரையின் (தமிழ்நாட்டில்) குறிப்பாக நாகூர், முட்டுப்பேட்டை மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களின் மரைக்காயர்களின் வழித்தோன்றலாக இருந்திருக்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.

கேரளாவின் மாப்பிளைகள்( Mappilas ) தமிழ் நாட்டின் மரைக்காயர் மற்றும் இலங்கை ‘மூர்ஸ்’ போன்ற அனைவரும் சாபி மத்ஹப் – ‘சுன்னி’ பிரிவை சேர்ந்தவர்கள்.

கி.பி 1530-க்குப் பிறகு காயல்பட்டின இஸ்லாமியர்களுக்குப் போர்த்துக்கீசியர்களால் தொல்லைகள் மிகுந்தன. இப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் உதவியுடன், போர்த்துக்கீசியர் கொச்சியிலிருந்து படையெடுத்து வந்து முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டியை உண்டாக்கினர். கிறித்துவ மதப்பரவலும் இங்கு மோதலை உண்டாக்கியது. இருதரப்பிலும் போரினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியின் இஸ்லாமியர் பலரும் கீழக்கரை, பரங்கிப்பேட்டை, நாகூர், காரைக்கால், பழவேற்காடு, சென்னை, இலங்கை ஆகிய பகுதிகளில் குடியேறினர்.

இவ்வாறு காயல்பட்டினத்திலும் கேரளாவிலும் இருந்து இலங்கை வந்த லெப்பைகள், மரைக்காயர்கள், மாப்பிளைகளின் பரம்பரையினர் எமது ஊரிலும் கூடியிருந்தனர். சேகு லெப்பை (ஆராய்ச்சி), சின்ன லெப்பை (ஆராய்ச்சி ), கலந்தர் லெப்பை (போடி ), இஸ்மான் லெப்பை (உள்ளார் போடி ), சிக்கந்தர் லெப்பை (போடி ) மற்றும் சின்ன அஹமது லெப்பை போன்றோரை குறிப்பிடலாம்.

இந்த குறிப்புகளுக்கு மேலதிகமாக இன்னுமொரு ஆவணமாக ‘நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு’என்ற ஆவணமும் எம்மத்தியில் பிரபலயமான ஆவணமாகும்.

(இன்னும் வரும்)

முன்னைய பகுதி (01): கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்