அட்டாளைச்சேனையில் மீன் சந்தையை தவிர்த்து, பிரதான வீதியோரங்களில் மீன் வியாபாரம் செய்வோர் தொடர்பில் முறைப்பாடு: பொலிஸ் நடவடிக்கை இன்னுமில்லை
– அஹமட் –
அட்டாளைச்சேனையில் மீன் சந்தைக் கட்டடமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், சில மீன் வியாபாரிகள் குறித்த இடத்தில் மீன்களை விற்பனை செய்யாமல், தமது வாகனங்களில் மீன் சந்தைக் கட்டடத்துக்கு முன்பாகவும், பிரதான வீதியோரங்களிலும் வியாபாரத்தில் ஈடுபடுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் – இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அட்டாளைச்சேனையில் மேற்படி மீன் சந்தைக் கட்டடம் நீண்டகாலமாக திறந்து கொடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி ‘புதிது’ அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டதை அடுத்து, குறித்த மீன் சந்தைக் கட்டடம் உடனடியாக திறக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்தைக் கட்டடத்தின் முன்பாகவும், பிரதான வீதியோரங்களிலும் தமது வாகனங்களை நிறுத்தி – சிலர் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிரதேச சபையின் உத்தரவுக்கு மாறான நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வாகனங்களில் இவ்வாறு மீன் வியாபாரம் செய்கின்றவர்களால் – வீதியில் பயணிப்போரும், பொதுமக்களும் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் புகார்கள் உள்ளன.
மீன் சந்தையொன்று திறந்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அட்டாளைச்சேனை பிரதான வீதியின் ஓரங்களில் வாகனங்களில் மீன் விற்பனை செய்கின்றமை – ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடு எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பிரதான வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி மீன் வியாபாரத்தில் ஈடுபடுவோரிடம் – அவ்வாறு செய்ய வேண்டாம் என்று – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் கூறியதோடு, மீன் சந்தைக் கட்டடத்தினுள் மீன்களை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது பிரதேச சபை செயலாளரிடம் குறித்த மீன் வியாபாரிகள் முறைகேடாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த முறைப்பாட்டின் பின்னரும் அட்டாளைச்சேனை மீன் சந்தைக் கட்டடத்துக்கு முன்பாகவும் பிரதான வீதியின் ஓரங்களிலும், வாகனங்களில் மீன்களைக் கொண்டு வந்து வியாபாரம் செய்பவர்களின் தொந்தரவு தொடர்ந்தவாறே உள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்