கைக்குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பெண்கள் குறித்து, சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு எச்சரிக்கை

🕔 February 19, 2023

கொழும்பின் வீதிகளில் சிறு குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் பல பெண்கள் போதைக்கு அடிமையானவர்கள் என, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறு குழந்தைகளுடன் பெண் பிச்சைக்காரர்களுக்கு யூடியூப் சேனல்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலம் விளம்பரம் அளிக்கப்படுவதால், பல பெண்கள் இந்த பாதைக்கு திரும்பும் போக்கு காணப்படுவதாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனால் போக்குவரத்து விளக்குகளில் நிறுத்தும் சாரதிகளும் சிரமத்துக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சில யூடியூப் சேனல்கள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில், இதுபோன்ற பெண்களுக்கு உதவும் வீடியோகளை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அவர்களுக்கு எவ்வளவு உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகமாகும் என்று ரேணுகா ஜெயசுந்தர கூறுகிறார்.

இது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய பெண்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

இந்தப் பெண்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

போதைப்பொருள் பாவனையின் காரணமாக நாளாந்தம் ஆகக்குறைந்தது ஒரு புதிய நபராவது வீதியில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாக, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.

Comments