கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

🕔 February 16, 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு பகுதியாக இதனை ‘புதிது’ வெளியிடும். இது பகுதி – 01 ஆக அமைகிறது

– கியாஸ் சம்சுடீன் –

லங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் முதன் முதலாக முஸ்லிம்களின் குடியேற்றம் எப்போது ஆரம்பமானது என்பதில் – கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ‘முக்குவர்கள் கிழக்கில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தொடங்கிய காலத்திலிருந்து முஸ்லிம்களின் குடியேற்றம் ஆரம்பமானது’ என வரலாற்று சம்பவங்களை கொண்டு அனுமானிக்கலாம்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வரவேற்பு அறையில் வைக்கப்படுள்ள பெயர்பலகை – எமது பிரதேசத்தின் பண்டைய வணிகத்தொடர்பு, கலாசார முக்கியத்துவம், முன்னைய எல்லைகள், நிர்வாக முறைமை, அட்டாளைச்சேனை என்ற பெயர் வந்த வரலாறு, போன்ற பல சுவாரஷ்யமான தகவல்களை எமக்கு ஞாபகமூட்டுகிறது.

அம்பாறை மாவட்டத்தின் தென் கிழக்கு கடற்கரை நெடுகிலும் சுமார் 08 கி.மீற்றர் நீண்டுள்ள கிழக்கில் வங்காள விரிகுடாவையும் , மேற்கில் பரந்த வளமான நெல் நிலங்களை கொண்டு சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் தமண பிரதேச செயலகத்தின் கிழக்கு எல்லைவரை வியாபித்துள்ளது.

அட்டாளைச்சேனையின் தெற்கு – முன்னர் அக்கரைப்பற்று டி.எஸ் (D.S) அலுவலக வீதி மற்றும் வெள்ளப் பாதுகாப்பு வீதியையும் எல்லையாக கொண்டிருந்தாலும், தற்போது தைக்கா நகர் எல்லை வீதியையும், வடக்கில் களியோடை ஆற்றையும் எல்லையாக கொண்டு அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாப்பிய மற்றும் திராய்க்கேணி ஆகிய பிரதான கிராமங்களை உள்ளடக்கிய ‘அக்கரைப்பற்று வடக்கு கிராமோதய சபை’ என முன்னர் எமது பிரதேசம் அறியப்பட்டது.

1973 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி புதிய உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் உருவாகும் வரை, நிர்வாக ரீதியில் அக்கரைப்பற்றின் ஒரு அங்கமாகவே அட்டாளைச்சேனை இருந்து வந்துள்ளது.

எமது பிரதேசத்தில் உள்ள குடுவில் என்ற இடத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டில் (Inscription No. 487). தீகவாபியில் வசித்த வணிகர்கள் பற்றிய வரியொன்று இடம்பெற்றிருக்கிறது. (digavāpi poraṇa vaṇijhana). இது அட்டாளைச்சேனை பிரதேசம் 2000 ஆண்டுகளாக வணிகர்களிடையே பிரபல்யம் ஆகியிருப்பதை காட்டுகிறது.

மேலும் புதைபொருள் ஆராய்ச்சியின் அவசியத்திற்கு அப்பால் அங்காங்கே காணப்படும் கல்வெட்டுகள் சிதைவடைந்த தாதுகோபுரம் என்பன மகாவம்சம் சொல்லும் தீகவாபிமண்டலத்தை அறிய ஆவலைத் தூண்டுகிறது.

2000 ஆண்டு பழமை

இலங்கை முழுவதும் கோலோச்சிய எல்லாளனை தோற்கடிக்க துட்டகைமுனு தனது படைகளுடன் தீகவாவியிலிருந்தே புறப்பட்டு சென்றான் என்பது – எமது பிரதேசம் 2000 வருடங்களுக்கு முன்பே அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு சான்று பகர்கிறது.

குன்றுகள் மீதும் பாறைகளின் மேற்பரப்பிலும் பொறிக்கப்பட்ட பாறைக் கல்வெட்டுக்கள் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் பற்றிய தகவல்களை தருகின்றது.

சிதிலமடைந்து காணப்படும் கோயில்கள் தமிழர்களின் வாழ்வியலை பறைசாற்றுகிறது. ‘ஆதம் முனை’ என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலில் இருந்த சேகு அசனா பள்ளி, கல்முனையில் இருந்த முகைதீன் பள்ளி போன்றவை இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கின் கரையோரப்பட்டினங்களில் முஸ்லிம்களின் வாழ்விடங்கள் மத வழிபாட்டுத் தலங்களுடன் கூடிய வளமான ஒரு சமூக அமைப்பாக இருந்திருப்பதனை எடுத்துக்காட்டுகிறது.

மிகத் தொன்மையான – தொலமியின் உலக வரைபடத்தில் கல்முனை பிரதேசம் அடையாளம் இடப்பட்டுள்ளமையானது, கிரேக்க, பாரசீக மற்றும் அராபிய வியாபாரிகளின் இறங்குதுறையாக இருந்துள்ளதையும் சர்வதேச முக்கியத்துவத்தையும் எடுத்தியம்புகிறது.

இலங்கையின் தென்கிழக்கில் இருந்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் ‘தீ(ர்)கவாவி’ அல்லது ‘மஹா கண்டிய வேவா’ எனப்படும் நீண்ட நெடிய வாவி அல்லது குளம் 10000 – 20000 ஏக்கர் வயல் நிலத்துக்கு நீர்பாசனம் செய்யக்கூடியது என கருதப்பட்டது.

‘சிலோன் மனுவல்’ என்ற புத்தகத்தில் காணப்படும் சில விடயங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. அதில்; ‘இலங்கையில் உள்ள வாவிகளில் தென் கிழக்கு மட்டக்களப்பில் உள்ளவை – குறிப்பிடத்தக்களவு பெரியவை. புராதன இலங்கையின் செல்வத்துக்கும் பெருமைக்கும் அவற்றின் பங்களிப்பு பாரியவை. புராதன காலத்தில் இலங்கையின் தென்கிழக்குப் பாகமாது, உலகின் நெல் விளையும் இடங்கள் யாவற்றுள்ளும் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட கூற்று’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இக்குளங்களை அண்டிய பகுதிகளில் செல்வச் செழிப்புக் கொண்ட சனத்தொகை பெருக்கம் கொண்ட குடியாட்டங்களும் இல்லாமல் இருந்திருக்க முடியாது. இயற்கை அனர்த்தம், காலநிலை, பின்வந்த அந்நிய ஆட்சியாளர்களின் கவனிப்பாரற்ற தன்மை என்பவற்றால் இக்குளங்கள் தூர்ந்துபோயிருக்கக்கூடும்.

இவை தவிர – மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆதிக்குடிகளான நாகர், திமிலர் வரலாறு மற்றும் முக்குவர் குடியேற்றம், அதன் போது திமிலரிடமிருந்து பாதுக்காப்பை பெற ‘பட்டாணியர்’ என பொதுவாக அறியப்பட்ட பாரசீகர் அல்லது அராபியர்களின் உதவியை நாடிய சம்பவங்கள், அவர்களின் குடியேற்றங்கள் என்பனவும் கல்வெட்டுகளிலும் ஏடுகளிலும் வரலாற்று நூல்களிலும் வாய் வழிக் கதைகளிலும் பரவலாக காணப்படுகின்றன.

காடுகள் நாடாதலும் நாடுகள் காடாதலும் இயற்கையே என்ற விதிகளுக்கு அமைய, குளங்களும் நீர்நிலைகளும் கிராமங்களும் மக்களும் இல்லாமல் போயிருக்கக் கூடும். மக்களில்லாமல் அரசியலுமில்லை – அரச நிர்வாகமுமில்லை என்பதனால், இங்கு மக்கள் எப்போது குடியேறினர் என்பதை அறிதல் பயனுள்ளதாக இருக்கும்.

தற்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேசம் பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் சிறுபான்மையினராக சிங்களவர்களையும், தமிழர்களையும் கொண்டுள்ளது. இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் முதன் முதலாக முஸ்லிம்களின் குடியேற்றம் எப்போது ஆரம்பமானது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ‘முக்குவர்கள் கிழக்கில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தொடங்கிய காலத்திலிருந்து ஆரம்பமானது’ என வரலாற்று சம்பவங்களை கொண்டு அனுமானிக்கலாம்.

முக்குவர்களின் குடியேற்றம்

முற்காலத்தில் அயோத்தியை ஆண்ட – சூரிய குலத்து இளவரசர்கள், இலங்கையின் வளத்தையும் வனப்பையும்மறிந்து இங்கு குடிபுக விரும்பி, படை பரிபாரங்களுடன் படகுகளிலேறி – மட்டமான களப்பை (மட்டக்களப்பை) வந்தடைந்தனர். அவர்களின் நடமாட்டங் கண்ட திமிலர் தலைவனான புலியனும் அவனது படையினரும் அவ்விளவரசர்களையும், கூட்டத்தினரையும் எதிர்த்துப் போராடினர்.

முக்குவர்கள், வணிக நோக்கோடு இங்கு வந்திருந்த பட்டானியரின் (பாரசீகர் அல்லது அரேபியர் ) உதவியுடன் புலியனையும் அவனுடைய கூட்டத்தினரையும் அடித்துத் துரத்தினர். சிறைபிடிக்கப்பட்ட திமிலர் குலத்துக் கன்னியர் சிலரையும் முக்குவ பெண்களையும் பட்டானியர்களுக்கு திருமணம் செய்துவைத்து, ஏறாவூரிலும் காத்தான் குடியிலும் இவர்களைக் குடியேற்றினர்.

இளவரசர்கள் வெற்றியீட்டிய பகுதிக்குத் தம்முடன் வந்த கலிங்க இளவலை அதிகாரத்தில் இருத்தி விட்டு, தென்திசை நோக்கி சென்றனர் என்று கூறப்படுகிறது. அங்கு கொங்கு காசியப்பன் புட்டி – விந்தனையூடாக கொக்குநெட்டிச் சோலை, மண்ணேற்றிமுனை . சம்மான்துறை, மண்கற்புட்டி ஆகிய இடங்களுக்கு விஜயஞ் செய்தனர்.

அங்கிருந்து பட்டிப்பளையாறு, சதுப்பு நிலப்பரப்புகள் ஆகியவற்றைக் கடந்து – அட்டாளைச்சேனையிலுள்ள முல்லைதீவு என அழைக்கப்படும் ஒரு பிட்டியை அடைந்தனர். அங்கிருந்து நான்கு பக்கமும் நீராற்சூழப்பட்ட கருங்கொடித்தீவை வந்தடைந்தனர் என்று பரவலாக நம்பப்படுகிறது.

இந்த வரலாறு மட்டக்களப்பு மாவட்ட ஊர் பெயர்களில் வெளிப்படுகிறது. உதாரணத்துக்கு புளியந்தீவு (புலியன்தீவு), சத்துருக்கொன்டான் (சத்துருவை கொன்றான்), சந்திவெளி (படைபிரிவுகள் சந்தித்த வெளி ), காத்தான் குடி (காத்தவனின் குடி அல்லது கவுத்தனின் குடி), ஏறாவூர் (முன் குடி ஏறா ஊர் அல்லது திமிலரை குடி ஏற முடியாமல் அரணாய் தடுக்கும் ஊர்) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இங்கு வந்த முக்குவர், இந்த பிரதேசத்தில் வாழ்ந்த திமிலரை துரத்திவிட்டு, தங்களின் சமூகத்தாரை குடியேற்றினர் என்றும் காடுகளில் மறைந்து வாழ்ந்த திமிலர் – பழைமையான பகையின் காரணமாக, திருக்கோவில் பகுதி மக்களைத் துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. திமிலரை துரத்தியடிக்க – வணிக நோக்கத்துக்காக வந்த ‘மூர்’களை முக்குவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர்களின் பெண்களை திருமணம் செய்துவைத்து மட்டக்களப்பின் வடபகுதியில் செய்தது போலவே தென்பகுதியிலும் நிரந்தரமாக குடியேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

மட்டக்களப்பின் வட பகுதியில் நிகழ்ந்தது போன்று – பெரிய சண்டை நடைபெறாதபோதும், சண்டையில் தோல்வியை தழுவி தப்பிச்சென்ற திமிலர், அட்டாளைச்சேனை ‘முள்ளிக் குளத்து மலை’ எல்லைப்பகுதியில் இவர்களை எதிர்கொண்டு போரிட்டு வெட்டப்பட்டு இறந்தனர் என்றும் நம்பப்படுகிறது.

இந்நிகழ்வின் பின், முல்லிக்குளத்து மலை பிரதேசம் அமைந்துள்ள ‘துவரங்குடா’ எனும் இவ்விடத்திற்கு – ‘படை வெட்டினகுடா’ எனப் பெயர் வழங்கலாயிற்று. இவ்வாறு வந்த பட்டாணியரும் அரேபியரும் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்திலேயே இங்கு வந்து குடியேறினர்.

புத்தளத்தில் மதம்மாறிய முக்குவர் பற்றி காசிச்செட்டி ‘The Ceylon Gezatteer’ இல்; ‘கரையார்களின் தலைவன் மாணிக்கம் தனது மகளை திருமணம் செய்ய – முக்குவத் தலைவன் வெடி அரசனை கேட்டதாகவும் அதற்கு வெடி அரசன் இணங்காததால் அவன் மீது மாணிக்கம் போர் தொடுத்ததாகவும், அப்போது குதிரை மலையில் தரித்து நின்ற அரேபிய மாலுமிகளின் உதவி பெறப்பட்டு மாணிக்கத்தையும் அவனது படையினரையும் மாங்குலா வெளிக்கும் கட்டை காட்டிக்கும் இடையில் எதிர்கொண்டு அவனையும் அவனது படையினரையும் கொன்று, புற்று ஒன்றில் புதைத்ததாகவும் அந்த இடம் மாணிக்கன் புற்று என அழைக்கப்பட்டதாகவும்’ தெரிவிக்கிறார்.

அரபிகள் தங்களுக்கு செய்த உதவிக்காக – எல்லா முக்குவர்களும் முஸ்லிம் ஆனதாகவும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பின்னர் போத்துக்கீசரின் துன்புறுத்தலால் இஸ்லாத்தை துறந்து கிறிஸ்தவர் ஆனதாகவும் ‘The Ceylon Gezatteer’ இல் காசிச்செட்டி தெரிவிக்கின்றார்.

அட்டாளைச்சேனையின் அடையாளங்களில் ஒன்றான கோணாவத்தை ஆறு

(இன்னும் வரும்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்