முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை

🕔 February 14, 2023

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரும் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா, அரசியல் தொடர் ஒன்றினை எழுதி வருகின்றார். அதில் 11ஆவது அங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மரச் சின்னம் எப்படி வந்ததது என்பதை விபரித்துள்ளார். அது தொடர்பான விடயங்களை மட்டும் இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

1986 அல்லது 1987 ஆம் ஆண்டு. ஒருநாள் தலைவர் அஷ்ரப் அவர்களிடமிருந்து ஒரு தகவல் வருகிறது. அஷ்ரப் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராக வருவதாகவும் அந்த வழக்கில் ஆஜராகிவிட்டு அப்படியே தான் பொலனறுவை சென்று அங்கிருந்து கம்பளைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் வாழைச்சேனையிலிருந்து பொலனறுவைக்கு பஸ்ஸில் தனியாகப் பயணிக்கும்போது தன்னுடன் என்னையும் கூட வருமாறும் கோரியிருந்தார்.

முதல் நாளே நான் வாழைச்சேனைக்கு வந்து தங்கியிருந்து அடுத்த நாள் அவருடைய வழக்கு விசாரணை முடிவுற்றதும் அவரைக் கூட்டிக்கொண்டு கதுறுவெல பஸ் நிலையத்துக்குச் செல்கிறேன். கம்பளை பஸ் அப்போது கதுறுவலைக்கு வந்திருக்கவில்லை. பஸ் வரும்வரை காத்திருக்கிறோம். கடுமையான இறங்கு வெயில். வெயிலுக்கு ஒதுங்கி நின்று இருவரும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். அவர் பஸ்ஸுக்கு உள்ளே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க நான் வெளியே நின்றுகொண்டு பஸ்ஸின் ஜன்னல் வழியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

அப்போது அவர் பயணத்தில் வாசிப்பதற்காக அழகானதொரு நூலை நான் கொண்டு வந்திருக்கிறேன். 1970 களில் ஆனந்த விகடனில் வாரம் ஒரு கவிதை என்று தொடராகப் பிரசுரமாகி வந்த சிறந்த கவிதைகள் அடங்கிய கவிதைத்தொகுப்புதான் அந்த நூல். மிகச்சிறந்த கவிஞர்கள் நிறையப் பேர் அந்தக் கவிதைகளை எழுதியிருந்தனர். பொன்னடியான், பரந்தாமன், தமிழழகன், நா. விஸ்வநாதன், கவிக்கோ அப்துல் ரகுமான் எனப் புகழ்பெற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகள் அவை. அந்தக் கவிதைகளைச் சேகரித்து Binding செய்து வைத்திருந்தேன்.

அந்தத் தொகுப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதியிருந்த ‘மரமென்பது உயர்திணை’ (கவிதையைச் செவிமடுக்க: https://youtu.be/2l2y1A_Sb9Q)எனும் கவிதையும் மிகவும் அபாரமாக இருந்தது. அந்தக் கவிதையை தலைவருக்கு என்னுடைய குரலில் படித்துக் காட்டுகிறேன். கவிதையைச் செவிமடுத்து மகிழ்ந்துபோன அவர் பயணத்தில் வாசித்துக்கொண்டுபோக அந்தப் புத்தகத்தையும் கேட்கிறார். நான் நூலை அவரிடம் கொடுத்து விடுகிறேன்.

அந்த இடத்திலேயே நாங்கள் ஒரு முடிவை எடுக்கிறோம். இப்படித்தான் நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டோம். ஒருகாலத்தில் ‘மரமென்பது உயர்திணை’ எனும் அந்தக் கவிதையை எங்கள் கட்சிக்காகக் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களிடம் கேட்டு வாங்கிக் கொள்வோம் என்று தீர்மானிக்கிறோம்.

அதற்கு முன்பு நாங்கள் 1986 இல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தராசுச் சின்னத்தில்தான் போட்டியிட்டிருந்தோம். அதாவது ஆரம்பத்தில் எங்கள் தேர்தல் அரசியல் சின்னமாக (மீஸான்) தராசுதான் இருந்தது.

இப்படித்தான் கட்சிக்கு மரச்சின்னம் கிடைத்தது. இதெல்லாம் பின்வந்த ‘போராளி’களுக்குத் தெரியாது, தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

பின்வந்த காலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கும் அஷ்ரபுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஏற்படுகின்றன. அட்டாளைச்சேனையில் நிகழ்ந்த தேசிய மீலாத் தின விழா ஒன்றுக்குப் பிரதம விருந்தினராக கவிக்கோவை அழைத்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்