பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 February 13, 2023

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள நிலையில்,அதனை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் பிபிசி தமிழ் வினவியபோது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக” தெரிவித்திருக்கிறார்.

“2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்.

குறித்த திகதியில் பிரபாகரனை கொல்லப்பட்டமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்கள் வெளியிடுகின்றார்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.

“இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை” என்றும் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார் : பழ. நெடுமாறன் அறிக்கை

Comments