போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு

🕔 February 8, 2023

னாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையை 2022 ஆம் ஆண்டு கைப்பற்றி, பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நிராகரித்து விட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய போராட்டத்தின் போது, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, தனது கட்சிக்காரரிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி – நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே, உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் பணத் தொகை தொடர்பில் விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் இந்த தொகை தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், எனவே அதனை வழங்க முடியாது எனவும் அவர் கூறினார்.

பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், வேறு யாரும் உரிமை கோராததாலும், அதனை விடுவிக்க முடியாது என நீதவான் மேலும் தெரிவித்தார்.

ஜூலை 2022 இல் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போது, கிட்டத்தட்ட 17.5 மில்லியன் ரூபாவை அங்கு கண்டெடுத்தனர்.

பின்னர், அந்த பணம் எண்ணப்பட்டு, போராட்டக்காரர்களால் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த பணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்