வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு

– அஹமட் –
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரச பாடசாலைகளுக்கு அழைத்து – அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில அதிபர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அட்டாளைச்சேனையிலுள்ள அரச பாடசாலைகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து, அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வைபவங்கள் நடந்துள்ளதாகவும் இது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவோர் தமது மறைமுக பிரசாரத்தை மேற்கொள்வதற்காக, அரச சொத்தான பாடசாலைகளை வழங்குவது – அதிபர்கள் மேற்கொள்ளும் தண்டனைக்குரிய குற்றமெனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது பிரசாரங்களுக்காக – அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பாடசாலைகளுக்கு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் அங்கு நடைபெற்ற வைபவங்களில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையினை நிரூபிக்கும் வகையிலான புகைப்படங்களும் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இது குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பெற்றோர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.