மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் மரணம்

🕔 February 5, 2023

பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பேர்வேஸ் முஷாரஃப் 79வது வயதில் துபாயில் காலமானார்.

சில காலமாக உடல் நலக் குறைவால் அவர் அவதிப்பட்டிருந்தார்.

2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் பிணை பெற்ற பேர்வேஸ் முஷாரஃப் – ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தார்.

ஏற்ற இறக்கமான வாழ்க்கை

பாகிஸ்தானின் கடைசி ராணுவ சர்வதிகாரியாக அறியப்படும் முஷாரஃபின் வாழ்க்கை கடந்த இருபது ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது.

1999இல் நாட்டில் ஆட்சியைப் பிடித்த பிறகு, அவர் பல கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து, மேற்கத்திய உலகுக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் முன்னணியில் இருந்தார்.

ஆனால், அவரது அரசியல் கட்சி 2008ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. நாட்டின் அரசமைப்பை சட்டவிரோதமாக இடைநீக்கம் செய்ததாகவும் அவசரகால நிலையை விதித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் ஆட்சிக்கு வந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசமைப்பை மீறியதற்காக நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

பேர்வேஸ் முஷாரஃப் ஓகஸ்ட் 11, 1943ஆம் திகதி டெல்லியில் உருது பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் 1947இல் இந்திய பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தனர்.

ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, 1998இல் முஷாரஃபை – அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ராணுவ தலைமை அதிகாரியாக நியமித்தார்.

அடுத்த ஆண்டே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை முஷாரஃப் கவிழ்த்தார்..

நாடு தழுவிய எதிர்ப்பு

ராணுவத் தளபதியாகச் செயல்பட்டபோது – அவர் ஜனாதிபதியாக இருந்தமை குறித்த தகராறு உட்பட, ஜெனரல் முஷாரஃபின் பதவிக்காலம் நீதித்துறையுடனான இழுபறியால் குறைக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டில், அவர் அப்போதைய தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரியை பதவி நீக்கம் செய்தார். இது நாடு தழுவிய எதிர்ப்புகளைத் தூண்டியது.

முஷாரஃப் சகாப்தத்தின் முடிவுக்கான தொடக்கமாக, நாடு கடத்தப்பட்டிருந்த நவாஸ் ஷெரீஃப் 2007இல் திரும்பியமை அமைந்தது.

முன்னாள் ராணுவ ஜெனரல் தனது ஆட்சியை நீட்டிக்க அவசர நிலையை பிரகடனம் செய்தார். ஆனால், அவரது கட்சி பிப்ரவரி 2008 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. 06 மாதங்களுக்குப் பிறகு, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க ராஜினாமா செய்து – நாட்டை விட்டு வெளியேறினார்.

பேர்வேஸ் முஷாரஃப், லண்டன் மற்றும் துபாயில் தங்கியிருந்தபோது, உலகம் முழுவதும் அவர் வழங்கிய விரிவுரைகளுக்கு ஈடாக கோடிக்கணக்கான டொலர்களை சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை மீண்டும் ஆட்சிக்கு வருவதே தனது எண்ணம் என்பதை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை.

மார்ச் 2012இல், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வியக்கத்தக்க முறையில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். ஆனால், அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.

அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சி எதிர்பார்த்ததைப் போலவே தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

2007இல் பெனாசிர் பூட்டோ தாலிபன்களால் படுகொலை செய்யப்பட்டார். அது பாகிஸ்தானை மட்டுமின்றி மொத்த உலகையுமே உலுக்கியது. அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்காதது தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் அவர் விரைவில் சிக்கினார். 2010ஆம் ஆண்டு ஐ.நா விசாரணையில், ஜெனரல் முஷராஃப், முன்னாள் பிரதமரை பாதுகாப்பதில் “வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக” குற்றம் சாட்டப்பட்டார்.

அதே ஆண்டில், 2007இல் அரசமைப்பை இடைநிறுத்த அவர் எடுத்த முடிவுக்காக அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஆனால், நீண்ட காலமாக ராணுவம் ஆட்சி செய்த நாட்டில், வழக்கு விசாரணை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எனவே, முன்னாள் ஆட்சியாளரின் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அரசு அமைத்தது.

இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது. இறுதியாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், முஷாரஃப் தேசத்துரோக குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் போனது. பேர்வேஸ் முஷாரஃப் உடல்நலக் குறைவால் தற்போது உயிரிழந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்