பொத்துவில் துவ்வை ஆற்றினை புனரமைக்குமாறு, உதுமாலெப்பை வேண்டுகோள்

🕔 January 15, 2016

Uthumalebbe - 01– றியாஸ் ஆதம் –

பொத்துவில் விவசாயிகளின் நன்மை கருதி, அப்பிரதேசத்திலுள்ள துவ்வை ஆற்றின் இரண்டாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக – தான் பதவி வகித்த காலத்தில், துவ்வை ஆற்றின் முதலாம் கட்ட புனரமைப்பு நடவடிக்கையினை 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பொத்துவில் பிரதேசத்தில் மத்திய நீர்ப்பாசன காரியாலயத்தினால் நிருவகிக்கப்பட்டு வரும் துவ்வை ஆறு நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலும், துப்பரவு செய்யப்படாமலும் இருக்கின்றது.

இந்த ஆற்றின்; அணைக்கட்டு உடைவடைந்துள்ளமையினால், வெள்ள நீர் பெருக்கெடுக்கும்போது, பொத்துவில் பிரதேச விவசாயிகளின் காணிகள் பாதிப்படைகின்றன. குறிப்பாக பசறிச்சேனை, உல்லே மற்றும் சர்வோதயபுரம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் வெள்ளத்தினால் வருடாவருடம் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இப்பிரதேச மக்களின் நன்மை கருதி, கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக நான் பதவி வகித்த போது, 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, துவ்வையாற்றின் முதலாம் கட்ட புனரமைப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தோம்.

இதனால், துவ்வையாற்றின் வெள்ள நீரில் ஒரு பகுதியினை அறுகம்பே ஆற்றின் ஊடாக கடலுக்கு கொண்டு செல்வதற்கும், இன்னும் ஒரு பகுதியை குடாக்களி முகத்துவாரம் வழியாக கடலுக்கு கொண்டு செல்வதற்கும் வழியேற்பட்டுள்ளது.

மேலும், துவ்வையாற்றில் நீண்ட காலமாக விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தியதோடு, ஆற்றினை நன்றாகத் துப்பரவு செய்து, முதலாம் கட்ட புனரமைப்பினை நிறைவு செய்தோம்.

ஆயினும், துவ்வையாற்றின் இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதனால், பொத்துவில் பிரதேச விவசாயக் காணிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன், பல கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிப் போகின்றன.

எனவே, 2016 ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி திட்டத்தில், பொத்துவில் துவ்வை ஆற்றின் புனரமைப்புப் பணிகளுக்கு மத்திய நீர்ப்பாசன திணைக்களம் முன்னுரிமை கொடுத்து, நிதி ஒதுக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்