உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தினம் அறிவிப்பு

🕔 January 4, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி மாதம் கோரப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 2023 ஜனவரி 18 புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்கள் கோரல் முடிவடையும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

2022 டிசம்பரில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான முடிவை ஆணைக்குழு அறிவித்தது.

இதன்போது, ஒவ்வொரு பிரிவுக்கும் தெரிவு செய்யப்படவுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2022 டிசம்பர் 08 ஆம் திகதி வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல்ஆணையாளர்களை நியமித்து டிசம்பர் 22ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு, விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டையும் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 2022 இல் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டது. அதற்கிணங்க பெப்ரவரி 20, 2023 க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்