கால்பந்து உலகக் கோப்பை; தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கே 1105 கோடி ரூபா பரிசு: ஆர்ஜென்டினா அள்ளிய தொகை எவ்வளவு?

🕔 December 19, 2022

லகக் கால்பந்து போட்டி என்பது, ஒரு விளையாட்டு என்பதற்கு அப்பால் அது – மிகப் பெரும் வணிகமுமாகும். இதில் வெற்றி ஈட்டும் அணிகள் தொடக்கம் கலந்து கொள்ளும் அணிகளுக்கும் பல கோடிகள் பரிசாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று நடந்து முடிந்த ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் வென்ற ஆர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பையுடன் சேர்த்து, 42 மில்லியன் அமெரிக்க டொலர் பணமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது இது இலங்கை பெறுமதியில் 1547 கேடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும்.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மொத்த பரிசுத்தொகை, 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.

இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டொலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டொலர் மதிப்பிலான பணத்தை பரிசாக ஃபிஃபா வழங்கியுள்ளது

இதன் மதிப்பு இலங்கை மதிப்பில் 16,211 கோடி ரூபாய் ஆகும். இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள ஆர்ஜென்டினா அணிக்கு 1547 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை (42 மில்லியன் அமெரிக்க டொலர்) வழங்கப்படுகிறது.

இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு 1105 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை (30 மில்லியன் அமெரிக்க டொலர்) பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், இத்தொடரில் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் முறையே 27 மில்லியன் (994 கோடி ரூபா) மற்றும் 25 மில்லியன் (921 கோடி ரூபா) அமெரிக்க டொலர்களைப் பரிசாகப் பெறுகின்றன.

இவை மட்டுமல்லாமல், ஐந்து முதல் எட்டாம் இடம் வரை பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தலா 17 மில்லியன் அமெரிக்க டொலரும் (626 கோடி ரூபாவுக்கும் அதிகம்), ஒன்பதாவது முதல் பதினாறாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 13 மில்லியன் அமெரிக்க டொலரும் (478 கோடி ரூபா) வழங்கப்படும்.

பதினேழாவது இடம் முதல் முப்பத்திரண்டாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 09 மில்லியன் அமெரிக்க டொலர் (331 கோடி ரூபா) வழங்கப்படுகின்றன.

கூடுதலாக, ஒவ்வொரு தகுதி பெற்ற அணியும் போட்டிக்கு முன்னதாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை (55 கோடி ரூபா) தயாரிப்பு செலவுகளுக்காகப் பெறுகின்றன.

கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டொலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது இது 42 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டொலர் மற்றும் 28 மில்லியன் டொலராக உயர்ந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்