பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள, நீதிமன்றம் அனுமதி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேஷராஜா உத்தரவிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு, இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிள்ளையானை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
ஆயினும், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் எனும் வகையில், எதிர்வரும் 26ம் திகதி சபை அர்வில் பிள்ளையான் கலந்து கொள்ள முடியும் என்று, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.