நாவிதன்வெளி பிரதேச சபை: வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படவிருந்த நிலையில், சபையை ஒத்தி வைத்தார் தவிசாளர்
🕔 December 6, 2022
– பாறுக் ஷிஹான் –
நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பினை நடத்தாது சபை நடவடிக்கைகளை 20ஆம் திகதி வரை தவிசாளர் ஒத்தி வைத்துள்ளார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 58 ஆவது அமர்வு பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (06) ஆரம்பமான நிலையில் 2023 ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சபையில் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது வரவு – செலவுத் திட்டம் மக்களின் தேவையினைப் பிரதிபலிக்கவில்லை என உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி பேசினர்.
தவிசாளர் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மக்களின் தேவைகளை தவிர்த்து தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும் சபையில் உரையாற்றிய பெருன்பான்மையான உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தவிசாளரும் தன்பக்க நியாயங்களை சபையில் முன்வைத்தார்.
ஆயினும் சபையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதையடுத்து, எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை சபையை ஒத்தி வைப்பதாக தவிசாளர் அறிவித்தார்.
சபை ஒத்தி வைப்பினை ஏற்று கொள்ளாத உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி, வரவு – செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாஸ ஆனந்த தெரிவித்தார்.