அமெரிக்க தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2024ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தேவையான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்தவகையில் டிரம்ப் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்த சில நிமிடங்களில் பேசி டிரம்ப்; “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என்றார்.
ட்ரம்ப் பேசுவதற்கு முன்னர் ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் அவரை “அமெரிக்காவின் அடுத்த அதிபர்” என்று அறிமுகப்படுத்தியது.
“அமெரிக்காவை மீண்டும் மகத்துவமானதாக, பெருமையானதாக மாற்றுவதற்காக இன்றிரவு நான் அமெரிக்க அதிபருக்கான என்னுடைய போட்டியிடலை அறிவித்துள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.
“எனவே இனி 2024ஆம் ஆண்டு தேர்தல் நாள் வரை, இதுவரை யாரும் போராடாததைப் போல் நான் போராடுவேன். நமது நாட்டை உள்ளிருந்து அழிக்க முயலும் தீவிர இடதுசாரி ஜனநாயகவாதிகளைத் தோற்கடிப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.