கள்ளக் குழந்தை
‘போக்கிரி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உள்ளது. வேவு பார்ப்பதற்காக வடிவேலு தனது அடையாளத்தினை மறைத்துக் கொண்டு, மாறு வேடத்தில் செல்வார். ஆனால், ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற்போல் அவரை எதிர் தரப்பினர் இனங்கண்டு பிடித்து விடுவார்கள். பல தடவை இப்படி அகப்பட்டுப் போன வடிவேலு, கடைசியாக தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, வேவு பார்ப்பதற்காகச் செல்வார். ஆனால், அப்போதும் பிடிபட்டு விடுவார். வடிவேலுவுக்கென்றால் கோபம் கலந்த ஆச்சரியம். ‘எந்த வேடத்தில் வந்தாலும் எப்படியடா சொல்லி வைத்தால் போல் என்னைப் பிடித்து விடுகிறீர்கள்?’ என்று எதிர்தரப்பினரிடம் கேட்பார். ஒவ்வொரு தடவையும் வடிவேலு, அவரின் கொண்டையை மறைக்காமல் வந்த விடயத்தை அப்போதுதான் எதிர்த்தரப்பினர் வடிவேலுவுக்குச் சொல்லுவார்கள்.
சில காரியங்களைச் செய்வதற்காக, எப்படித்தான் ஒருசிலர் தங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொண்டு களத்தில் இறங்கினாலும், மிக எளிதில் அவர்கள் அகப்பட்டு விடுகிறார்கள். அவர்களின் ‘கொண்டை’கள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன.
கொஞ்ச நாட்களாக ‘சிங்க லே’ என்கிற சிலுசிலுப்பு நாடெங்கும் பரவி வருகிறது. ‘சிங்க லே’ என்றால், சிங்கத்தின் இரத்தம் என்று அர்த்தமாகும். இந்த வாசகத்தினைக் கொண்ட ‘ஸ்டிக்கர்’கள் முதலில் வாகனங்களில் ஒட்டப்பட்டன. பின்னர், நுகேகொடயிலுள்ள முஸ்லிம்களின் சுற்று மதில்களிலும், வாயிற் கதவுகளிலும் ‘சிங்க லே’ என்று தீந்தையினால் எழுதப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர், தாங்கள்தான் ‘சிங்க லே’ இயக்கத்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு தரப்பினர் ஊடகங்களின் முன்னால் தோன்றி, தங்களைப் பற்றி தன்னிலை விளக்கமளித்துக் கொண்டனர்.
‘சிங்க லே’ என்றால் என்ன, அதன் வரலாற்றுப் பின்னணி என்ன என்றெல்லாம் இங்கு ஆராயத் தேவையே இல்லை. சிங்களத்தின் பெயரால் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை அச்சமூட்டுவதற்கான ஒரு முயற்சிதான் ‘சிங்க லே’ என்கிற செயற்பாடாகும்.
யக்கலமுல்லே பாவர தேரர் என்கிற பௌத்த துறவி, ‘சிங்க லே’ இயக்கத்தின் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். ‘சிங்க லே’ இயக்கமானது, இனி, ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என்கிற பெயரால் அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
‘சிங்க லே’ என்கிற இயக்கமானது, ஓர் அரசியல் தரப்பின் கள்ளக் குழந்தையாகும். சோதிடத்தைப் போலவே இனவாதத்தினையும் இந்த அரசியல் தரப்பு ஆழ்ந்து நம்புகின்றது. இனவாதம் என்பதை தனது அரசியல் இருப்புக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த நினைப்பவர்கள்தான் ‘சிங்க லே’யை கையில் எடுத்திருக்கிறார்கள்.
முன்பு ‘பொது பல சேனா’வினை உருவாக்கியவர்கள்தான் இப்போது ‘சிங்க லே’யை ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற பரவலான பேச்சு உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கும் தந்தை ஒருவர்தான். இனவாதத்தின் மூலம் தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதே இந்தச் செயற்பாட்டின் நோக்கமாகும்.
‘முஸ்லிம் மக்களிடையே பீதியினை உருவாக்கி, அதனால் நன்மைகளை அனுபவித்த கூட்டத்தினர், ‘சிங்க லே’ என்கிற சுலோகத்தின் மூலம், மீண்டும் அதுபோன்ற பீதியினை உருவாக்கும் காரியங்களைச் செய்து பார்ப்பதற்கு முயற்சித்து வருவருகின்றனர்’ என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரின் கூட்டத்தாரினையும்தான் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இங்கு சாடைமாடையாக சொல்லியுள்ளார் என்று அதிகமானோர் அபிப்பிராயப்படுகின்றனர்.
பொது பல சேனாவினை தமது ஆட்சிக் காலத்தில் உருவாக்கி, முஸ்லிம்களை வேட்டையாடி ரசித்தவர்கள், இப்போது ‘சிங்க லே’யினைக் களமிறக்கி விட்டிருக்கின்றனர். பழைய மொந்தையில் புதிய கள்ளு என்பார்களல்லவா, அதுதான் இது.
‘சிங்க லே’ என்கிற இந்த இனவாதச் செயற்பாட்டுக்கு எதிராக, சிங்கள சமூகத்திலிருந்து கவனிப்புக்குரிய குரல்கள் ஆங்காங்கே வெளிக்கிளம்பி வருகின்றமையினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
‘சிங்க லே’ (சிங்கத்தின் இரத்தம்) என்று சொல்லிக் கொண்டு, இரவு வேளைகளில் நரித்தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களால், சிங்கள இனத்துக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருக்கின்றார்.
‘சிங்க லே’ என்கிற பெயரில் நாட்டுக்குள் இனவாதத்தினைத் தூண்டிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, முஸ்லிம்களின் வீட்டுச் சுவர்களில் ‘சிங்க லே’ என எழுதி, இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க முயற்சிக்கின்றவர்களை சட்டத்தின் முன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியிருக்கின்றார்.
ஆனால், இது தொடர்பில் அரசாங்கம் உருப்படியாக எதையும் இதுவரை செய்ததாகத் தெரியவில்லை.
‘சிங்க லே’ போன்ற இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக, போதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயங்குகிறது என்பது மட்டும் புரிகிறது.
பௌத்தத்தின் பெயராலும், சிங்கள இனத்தின் பெயராலும் மேற்கொள்ளப்படும் மேற்படி இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படப் போய், கடைசியில் பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் எதிரானவர்களாக தாம் சித்தரிக்கப்படும் நிலை வந்து விடுவோமோ என்கிற பயம் ஆட்சியாளர்களுக்கு சிலவேளை இருக்கக் கூடும்.
இந்த நிலையில், ‘நாட்டில் இனப்பிரச்சினையைத் தூண்டும் வகையில் செயற்படும் ‘சிங்க லே’ அமைப்பை தடைசெய்வதற்கு, பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று, ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றிணைவு எனும் அமைப்பும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு கவனிப்புக்குரியது.
‘சிங்க லே’ அமைப்பினூடாக இனங்களுக்கிடையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றிணைவு அமைப்பு எச்சரித்துள்ளது.
மதம் மற்றும் இனங்களின் ஊடாக மக்களை இலகுவில் உணர்ச்சிவசப்படுத்த முடியும் என்பது பொதுவான உண்மையாகும். சிங்கள மக்களிடையே அவ்வாறானதொரு உணர்வு மேலீட்டினை ஏற்படுத்தி, தனது ஆட்சியினைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்த நம்பிக்கையானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு தோற்றுப் போனது என்பதை நாம் நன்கு அறிவோம்.
இலங்கை போன்ற பல்லினங்களைக் கொண்ட ஒரு நாட்டில், குறித்த ஓர் இனத்தை மட்டும் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஓர் அத்தாட்சியாகும்.
ஆனாலும், அரசியலில் மீண்டும் இனவாதத்தினைப் பரீட்சித்துப் பார்க்கவே அவ்வாறானவர்கள் விரும்புகின்றனர். ஆகக்குறைந்தது, ‘சிங்க லே’ போன்ற அமைப்பின் செயற்பாடுகள் மூலம், இந்த அரசு மீது சிறுபான்மையினர் நம்பிக்கையிழக்கும் நிலையினை ஏற்படுத்த முடியுமா எனவும் இதன் பின்னணியிலுள்ளோர் யோசிக்கக் கூடும்.
இதேவேளை, ‘சிங்க லே’ இயக்கமானது பொது பல சேனா போல் செயற்படக் கூடாது என்று, முன்னாள் ஜனாதிபதியின் இளைய புதவர் ரோஹித ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நுகோகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளின் சுற்று மதில்களிலும், வாயிற் கதவுகளிலும் ‘சிங்க லே’ என்கிற வாசகம் எழுதப்பட்டமையினை அடுத்தே, ரோஹித ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.
ரோஹிதவின் கருத்தின்படி, பொது பல சேனாவின் நடவடிக்கைகள் மோசமானவையாகும். ஆனால், அவருடைய தந்தையின் ஆட்சியின்போது, பொது பல சேனாவின் இனவாதச் செயற்பாடுகளை இவர்கள் எவரும் கண்டிக்கவேயில்லை. மாறாக, ரோஹிதவின் சிறிய தந்தையான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொது பல சேனாவை ‘பாலூட்டி’ வளர்த்தார். பொது பல சேனாவின் ‘கோட் ஃபாதர்’ போல், கோட்டா செயற்பட்டார்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு, ‘சிங்க லே’ இயக்கம் தொடர்பான ரோஹித ராஜபக்ஷவின் பதிவினைப் பார்த்தபோது, ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற கதை நினைவுக்குள் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
இனவாதம் என்பது எப்போதும் வெற்றிபெறுவதில்லை. எப்போதாவது ஒரு தடவை வெற்றி பெறக் கூடும். அதுவும் நிலையான வெற்றியாக இருப்பதில்லை. அந்தவகையில், ‘சிங்க லே’ என்கிற இனவாதக் கோசமானது இறுதியில் தோற்றுப் போய்விடும் என்றுதான் பலரும் நம்புகின்றனர். தோற்றுப் போக வேண்டும் என்பதுதான் நல்ல மனிதர்களின் பிரார்த்தனைகளாகவும் உள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் இணையங்களில் ஒரு வீடியோ காட்சியினைக் காணக் கிடைத்தது. ‘சிங்க லே’ என்கிற வாசகத்தினைக் கொண்ட ‘ஸ்டிக்கர்’யினை தனது வாகனத்தில் ஒட்டியிருந்த சிங்கள சகோதரர் ஒருவர், அதனைக் கிழித்து வீசும் காட்சி, குறித்த வீடியோவில் பதிவாகியிருந்தது. வேன் ரக வாகனத்தில்தான் அந்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்தது. அந்த வேன் வாடகைக்கு ஓடுவது. ஆனால், தனது வாகனத்தில் ‘சிங்க லே’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நாளிலிருந்து, தனக்கு தொழில் குறைந்துபோய் விட்டதாக, குறித்த வாகனத்தின் ஓட்டுநர் கவலையுடன் கூறிக் கொண்டே, அதில் ஒட்டப்பட்டிருந்த ‘சிங்க லே’ ஸ்டிக்கரைக் கிழித்து வீசுவதைக் காண முடிந்தது.
பெரும்பான்மையான மக்கள் இனவாதச் செயற்பாடுகளை வெறுக்கின்றனர் என்பதற்கு மேற்சொன்ன விடயம் ஓர் ஆதாரமாகும். ஆனால், ‘சிங்க லே’ ‘ஸ்டிக்கர்’களை இன்னும் தமது வாகனங்களில் ஒட்டிக் கொண்டு திரிகின்றவர்களையும் காணத்தான் முடிகிறது. அப்படிப் பார்த்தால், இனவாதத்தினைச் சுமந்து திரிவதற்கும் ஒரு கூட்டத்தினர் தயாராகவே உள்ளனர்.
இந்தக் கூட்டத்தினர் சிறிய தொகையினராக இருந்தாலும் கூட, இவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில், ‘சிங்க லே எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ‘ஸ்டிக்கர்’ விவகாரத்தினை தட்டிக் கழிக்கும் ஒரு சாமான்ய விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது கூறியிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது. ‘மேற்படி விவகாரம் தொடர்பில் நாங்கள் விவஸ்தையில்லாமல் இருக்க முடியாது. இந்த விடயத்தினை அவதானமாகவும், பக்குவமாகவும் கையாள வேண்டியுள்ளது’ என, அமைச்சர் ஹக்கீம் கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவையாகும்.
‘சிங்க லே’ விவகாரத்தினை ஆட்சியாளர்கள் தட்டிக் கழிப்பது அல்லது கவனிக்காமல் விடுவதென்பது, இனவாதச் செயற்பாட்டாளர்களுக்கு உச்சாகத்தினையும், தைரியத்தினையும் ஏற்படுத்தி விடலாம். அந்த தைரியமே அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர வைத்து விடக் கூடும்.
ஒரு காட்டுத் தீயினை ஏற்படுத்துவதற்கு, தீக்குச்சியொன்று போதுமானதாகும்.
நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (12 ஜனவரி 2015)