திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்
– றிசாத் ஏ. காதர் –
ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தினைப் பராமரிப்பதில், அதற்குப் பொறுப்பான அட்டாளைச்சேனை பிரதேச சபை அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேற்படி திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தின் சுற்று வேலியானது யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்ற போதும், அதனை இதுவரை திருத்தியமைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை குறித்தும் மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர்.
மேலும், கழிவு சேகரிக்கும் நிலையத்தின் வேலி ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றமையினால், அதனை அண்டியுள்ள பாதையில் பயணிப்போர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இப்பகுதியிலுள்ள குடியிருப்பு பிரதேசங்களும் யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில், யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதால், அங்குள்ள உப உணவு மற்றும் நெற் செய்கை விவசாயிகளும் பாரிய இடர்களை எதிர்கொள்கின்றனர்.
திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் கடந்த காலங்களில் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட போதிலும், தற்போது, அதனைப் பராமரிப்பது தொடர்பில் அதற்குப் பொறுப்பான அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினர் அசமந்தமாகச் செயற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அஷ்ரப் நகர் கிராமத்தின் முக்கியமான பாதை ஒன்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள இக்கழிவகற்றல் நிலையத்தை பராமரித்து, யானைகளின் அட்டகாசத்தினை தடுக்கும் வகையில், பொருத்தமான இடங்களில் யானை வேலிகளை அமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.