ஜப்பான் மீது வீசப்பட்ட அணு குண்டிடை விடவும், ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு; நிபுணர்கள் தகவல்

🕔 January 6, 2016

Atomic bombing of Hiroshima - 0987
ரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விடவும், ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹைட்ரஜன் குண்டை வட கொரியா பரிசோதித்ததாக இன்று அறிவித்துள்ள நிலையில், ஹைட்ரஜன் குண்டு பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதேவேளை, அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ‘சூப்பர் வெடிகுண்டு’ என்று கருதப்படும் ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளதையடுத்து, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

வடகொரியா 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை சோதனை செய்த அணுகுண்டு வகைகள், சுமார் 02 லட்சம் உயிர்களைப் பலிவாங்கிய ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டை ஒத்ததாகும்.

அணுகுண்டுகள் அணுப்பிளவை நம்பியிருக்கும் ஒன்றாகும். அதாவது அணுமின் நிலையங்களில் செயல்படுவது போன்றது. இந்நிலையில் தெர்மோ நியூக்கிளியர் வெடிகுண்டு என்று அழைக்கப்படும் ஹைட்ரஜன் குண்டுகள், அணுப்பிளவு என்பதற்குப் பதிலாக ‘ஃபியூஷன்’ அடிப்படையில் இயங்குவதாகும். அதாவது அணுக்கருக்கள் ஒன்று சேர்ந்து கடும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகும்.

இது குறித்து டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் டகாவ் டகஹரா கூறும்போது, “சூரியனுக்குள் என்ன நடக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். கோட்பாட்டு அளவில் இதன் நடவடைக்கைகள் எல்லைகளற்றது, வரம்பு நிர்ணயங்களுக்குட்படாதது. வெளிப்படும் ஆற்றல் மிகப்பெரியது, அதாவது எவ்வளவு பெரியது என்பதை விவரிக்கும் பொருத்தமான வார்த்தை இல்லை” என்றார்.

இதன் இன்னொரு பெரிய அச்சுறுத்தல் என்னவெனில் கண்டம் விட்டு தாக்கும் ஏவுகணையிலும் வைத்து தாக்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆற்றலை உள்ளடக்கிய மிகச்சிறிய வடிவிலும் ஹைட்ரஜன் குண்டுகளை தயாரித்து விட முடியும் என்கிறார் டகஹரா.

ஆனால் ஹைட்ரஜன் குண்டுகளை கட்டுப்பாடுடன் இயக்க, துல்லியமாக இயக்க கூடுதல் தொழில்நுட்பம் தேவை. ஏனெனில் மிகப்பெரிய அளவில் ஆற்றல் தேக்கிவைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுவதால் கட்டுப்பாட்டுத்தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் தேவைப்படும்.

அதாவது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், மற்றும் சீனா ஆகிய நாடுகளே இத்தகைய பெரிய அணுத்திறன்களைக் கொண்டுள்ளன. பிற நாடுகள் இதனை உற்பத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அதற்கான சான்றுகள் இல்லை. இந்நிலையில் வடகொரியா தற்போது ஹைட்ரஜன் குண்டை சோதித்ததாகக் கூறியுள்ளது.

இதுவரை ஹைட்ரஜன் குண்டுகள் எந்த இலக்கையும் நோக்கி வீசப்பட்டதில்லை. 1950களில் அமெரிக்கா முதன்முறையாக ’மைக் அண்ட் பிராவோ’ என்ற ஹைட்ரஜன் குண்டை பரிசோதித்தது, உடனடியாக ரஷ்யாவும் இதே ரக குண்டை சோதித்தது.

இதில் பிராவோ ஹைட்ரஜன் குண்டு சோதனை செய்யப்பட்ட போது, அப்பகுதியின் அருகில் சென்ற ஜப்பான் மீன்பிடிப் படகு கதிர்வீச்சால் பீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்