மஹிந்தவின் நண்பர், ‘பீகொக்’ உரிமையாளர்; யார் இந்த லியனகே?

🕔 January 2, 2016

ASPLiyanage - 064
– மப்றூக் –

ஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது 75 கோடி ரூபாய் பெறுமதியான ‘பீகொக்’ எனும் பெயர் கொண்ட வீட்டை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஏ.எஸ்.பி. லியனகே என்கிற பிரபல வர்த்தகர் முன்வந்தமை பற்றி பலரும் அறிவர்.

ஆயினும், அந்த நபர் அறிவித்தமை போல் – குறித்த வீட்டினை மஹிந்தவுக்கு வழங்கவில்லை.

மஹிந்தவுக்கு மேற்படி வீட்டினை வழங்க வேண்டாம் என, தனது குடும்பத்தார் அழுத்தம் கொடுத்தமை காரணமாகவே, அந்த வீட்டினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க முடியாமல் போனதாக லியனகே தெரிவித்திருந்தார்.

தற்போது, இவ் விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் லியனகேவை நாளை மறுதினம் அழைத்துள்ளனர்.

என்னதான் இவர் மஹிந்த ராஜபக்ஷவின் நண்பர், விசுவாசி என்றாலும் கூட,  75 கோடி ரூபாய் பெறுமதியான வீட்டினை, மஹிந்தவுக்கு அன்பளிப்பாக வழங்க முன்வந்தமைக்கு, பின்னணியொன்று இல்லாமல் போய் விடாது என்கிற பேச்சுக்களும் பரவலாக உள்ளன.

இந்த நிலையில், இவர் பற்றி அறிவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர்.

யார் இந்த லியனகே

பனகொட டொன் பீரிஸ் சொலமன் அனுர லியனகே என்கிற முழுப் பெயரைக் கொண்ட மேற்படி நபர் ஏ.எஸ்.பி. லியனகே என்கிற பெயரால் பிரபலமானவர்.

இவர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமானவர். மஹிந்த ராஜபக்ஷவை தனது நண்பர் என்று இவர் குறிப்பிடுகின்றார்.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது, மேற்படி லியனகே என்பவர் நைஜீரிய நாட்டின் இலங்கைக்கான தூதுவராகக் கடமையாற்றினார்.

இலங்கையிலுள்ள பிரபலமான வர்த்தகர்களில் ஒருவரான இவர், ஏ.எஸ்.பி. குழுமத்தின் ஸ்தாபகராவாரர்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், லியனகே –  இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நாலந்தா கல்லூரியில் லியனகே கல்வி கற்றார். இவருக்கு இரண்டு மகள்மார் உள்ளனர்.

Comments