அட்டாளைச்சேனை இறைச்சிக் கடைகளில் அநீதி: பிரதேச சபை, தவிசாளர் உடனடியாகத் தலையிடுமாறு மக்கள் கோரிக்கை

🕔 March 29, 2022

– ஸஹீர் கான் பாரூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மாட்டு இறைச்சிக் கடைகளில் சரியான நிர்ணய விலையை அட்டாளைச்சேனை பிரதேச சபை அறிவிக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மாட்டு இறைச்சிக் கடை முதலாளிகள் தாங்கள் நினைத்த விலைக்கு இறைச்சியை விற்பனை செய்கிறார்கள் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

விலை பட்டியல்களைக் காட்சி படுத்தாமல், அடிக்கடி விலைகளை அதிகரித்துக் கொண்டு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், இறைச்சியுடன் அதிகளவில் எலும்பு கலந்து விற்கப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் கூலி வேலை செய்து கிடைக்கும் 1500 ரூபாய் பணத்தில், ஒரு கிலோ இறைச்சியை 1400 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கொடுக்கப்படுகின்ற பணத்துக்கு தராசில் எவ்வளவு இறைச்சி நிறுக்கப்படுகிறது என்பதைக் கூட மக்களுக்கு அறிய முடியாமல் உள்ளதாக கூறும் மக்கள், அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசைப் பயன்படுத்துவதற்கும், நிறுவையினை மக்கள் காணும்படி தராசை வைப்பதற்கும் பிரதேசசபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பாக அட்டாளைச்சேனையின் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தலையிட்டு மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்