லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம்

🕔 December 17, 2015
lasantha - 08765
பு
கழ்பெற்ற ஊடகவியலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க, தன்னைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த வாகன இலக்கங்களை எழுதி வைத்ததாகக் கூறப்படும் புத்தகமொன்றினை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ மறைத்து, விசாரணையை திசைதிருப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் தனது வீட்டிலிருந்து சண்டே லீடர் பத்திரிகை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், மர்ம நபர்களால் இடைமறிக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

தனது காரினை சிலர் பின்தொடர்ந்து வருவதை அவதானித்த லசந்த, அது பற்றி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மலிக் சமரவிக்கிரமவுக்கு, கையடக்கத் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, லசந்தவைப் பின்தொடரரும் வாகன இலக்கத்தை தனக்கு அறிவிக்குமாறு லசந்தவிடம் மலிக் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்பிரகாரம், வாகனத்தை ஒரு கையால் செலுத்திக் கொண்டே, பழக்கமற்ற இடது கை மூலம் கொலையாளிகள் பின்தொடர்ந்த வாகனத்தின் இலக்கத்தை லசந்த தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார். ஆயினும், அந்த இலக்கத்தை மலிக் சமரவிக்கிரவிற்கு அறிவிக்க முன்பாகவே, கொலையாளிகள் லசந்த மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டிருந்தனர்.

லசந்தவின் கொலைச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த கல்கிஸ்சை பொலிசார், கொலையாளிகளின் வாகன இலக்கம் எழுதப்பட்ட குறிப்புப் புத்தகத்தையும் கைப்பற்றியிருந்தனர். அந்தப் புத்தகம், கல்கிஸ்சை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேசையில் இருந்த போது கையடக்த் தொலைபேசி மூலமாக புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், பின்னர் அந்தக் குறிப்புப் புத்தகம் – பொலிஸ் மா அதிபரினால் தருவிக்கப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  அந்தப் புத்தகத்தினை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அன்று சேவையில் இருந்த பொலிஸ் மா அதிபர் வழங்கியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது கையடக்கத் தொலைபேசியினால், படம் பிடிக்கப்பட்ட லசந்தவின் குறிப்புப் புத்தகத்தில் காணப்பட்ட வாகன இலக்கம் குறித்து, பொலிசார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சற்று தெளிவற்ற நிலையில் காணப்படும் குறித்த இலக்கத்தையக் கண்டுபிடிப்பதற்காக, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்