பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு

🕔 March 11, 2022

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை – முல்லிக்குளத்து மலைப் பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியினுள் சட்டவிரோதமாக நுழைந்து விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளை தாம் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்றில் நேற்று (10) மாலை ‘குரல்கள் இயக்கம்’ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்த இயக்கத்தின் சட்டப் பிரிவு உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். ஹஸ்ஸான் ருஷ்தி இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“விகாரை அமைப்பதற்கான வேலைகள் இடம்பெற்ற காணி, தனிநபர் ஒருவருக்கு சட்டபூர்வமாகச் சொந்தமானது. அந்தக் காணியின் ஆவணத்தில் அதன் ஒரு பக்க எல்லை – ‘முல்லிக் குளத்து மலை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காணியின் ஒருபகுதியில் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது.

இங்குள்ள சில காணிகளை தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடமபெற்று வருவதைக் காண முடிகிறது. ஆனால், சம்பவ தினமன்று நடந்தது தொல்லியல் விடயமல்ல. அது மதம் சார்ந்ததொரு விவகாரமாகும். அங்கு வந்தவர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள். அங்கு வந்த பொலிஸாரும் ராணுவத்தினரும் விகாரை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கே பாதுகாப்பு வழங்கினார்கள். அங்கு மதச் சடங்கும் நடந்துள்ளது” என்றார்.

இதேவேளை அங்கு நடந்த விடயம் சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது எனவும் ருஷ்தி குறிப்பிட்டார்.

”சம்பவ இடத்தில் காணிச் சொந்தக்காரருக்கு பொஸாரிடமிருந்து சட்ட உதவிகள் கிடைக்கவில்லை. பொலிஸாரும் ராணுவத்தினரும் அங்கு சமூகமளித்திருந்த போதும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டனர்” எனவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதோடு, அவருக்கு சட்டரீதியான பாதுகாப்பு பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியான பிரச்சினையாகவே குரல்கள் இயக்கம் பார்ப்பதாகக் கூறிய சட்டத்தரணி ருஷ்தி; இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடி, சட்ட நிவாரணத்தைப் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு முறைமைகளின் நீட்சி

குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் சட்டமாணி ஜே. ராஸி முகம்மத் இங்கு பேசுகையில்; முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள காணிகள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன என்பது குறித்து விவரித்தார்.

“முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள காணிகள் தொல்லியல் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்படுகின்றன. வனபரிபாலன சட்டத்தின் கீழ் காடுகளாக்கப்படுகின்றன. இவற்றின் நீட்சியாகவே, முல்லிக் குளத்து மலைப் பகுதியில் நடந்த பிரச்சினையை நாம் பார்க்கிறோம்” என்றார்.

மேலும், “தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து, விகாரை கட்டுவதற்கு முயற்சித்தவர்கள் சட்ட ரீதியாகத் தண்டிக்கப்பட வேண்டும்” எனவும் கூறினார்.

சட்டம் மறுக்கப்பட்டுள்ளது    

குரல்கள் இயக்கத்தின் சட்டப் பிரிவு உறுப்பினர்களில் ஒருவரான சட்டத்தரணி எம்.எம். ரதீப் அஹமட் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்; குறித்த பிரச்சினை முடிந்து விட்டது எனும் தோற்றப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், அது இன்னும் முடியவில்லை என்கிற சந்தேகம் தமக்கு உள்ளது என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களுக்கும் பிணை கிடைப்பதற்கு சட்டத்தில் ஏதுக்கள் உள்ளபோதிலும், தொல்லியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களுக்கு பிணை கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதனால்தான் ‘தொல்லியல் இடம்’ எனும் பெயரில் காணிகள் அபகரிக்கப்படுவதாகக் கூறினார்.

“தொல்லியல் இடங்கள் மீது இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் சம உரித்து உள்ளது. ஆனால், ஒரு சமூகத்தினர் மட்டும்தான் அவ்வாறான இடங்கள் மீது உரிமை கொண்டாடுகின்றனர்” .

“தொல்லியல் இடத்தில் அபிவிருத்தி வேலைகள் செய்வதென்றால் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெறவேண்டும். அவ்வாறில்லாமல் செயற்படுவது பாரதூரமான குற்றமாகும்” என்றும் சட்டத்தரணி ரதீப் தெரிவித்தார்.  

மேலும், சம்பவ தினம் நடந்த விடயங்கள் – சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தமையினால், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ், அது ஒரு குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால், சம்பவ தினமன்று குறித்த காணியின் உரிமையாளருக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது” எனவும் சட்டத்தரணி ரதீப் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

இந்த ஊடக சந்திப்பில் பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்ற காணியின் பராமரிப்பாளரான பாமுனையைச் சேர்ந்த யூ.எல். கஸ்ஸாலி கலந்து கொண்டு, அன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.

“புதன்கிழமை காலை 7.30 மணியளவில்தான் எமது காணியினுள் பௌத்த பிக்குகளுடன் சிலர் வந்து – ஏதோ செய்வதாக கேள்விப்பட்டேன். குறித்த காணி எனது மூத்தம்மாவுக்கு (தாயின் தாய்) சொந்தமானது. அதனை நான்தான் பராமரித்து வருகின்றேன்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் அவர்களுக்கு விடயத்தை தொலைபேசி வழியாகக் கூறினேன். பின்னர் எனது சகோதரரை அழைத்துக் கொண்டு உரிய இடத்துக்குச் சென்றேன். அங்கு பௌத்த பிக்குகள் சிலரும், வேறு நபர்களும், சிவில் உடையிலும் சீருடையிலும் ஆயுதம் வைத்துக்கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தனர்.

இதற்கு முன்னரும் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் 02 பிக்குகள் இவ்வாறு எமது காணிக்குள் நின்றிருந்தனர். அப்போது அவர்களிடம் நான் அது பற்றி விசாரித்தேன். அந்தக் காணி தங்களுடையது எனக்கூறி என்னை திட்டி விரட்டினார்கள்.

நேற்று முன்தினம் நான், சட்டத்தரணி அன்சில் மற்றும் எனது சகோதரர் உட்பட 05 பேர்தான் ஆரம்பத்தில் எனது காணிக்குள் சென்றோம்.

அங்கிருந்த பொலிஸாருடன் பேசியபோது, அந்த இடத்தில் பொலிஸ் சாவடியொன்றை அமைக்கவுள்ளதாகக் கூறி, அந்த இடத்தில் நிற்க வேண்டாம் என்றார்கள். ஆனால், நாங்கள் எமது காணிக்குள் சென்று அமர்ந்து கொண்டோம். பின்னர் பெருமளவான பொதுமக்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

எனது காணியை அவர்கள் அபகரிக்க முற்படுகிறார்கள் என்பதை விடவும், முஸ்லிம்ளுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறு பௌத்த பிக்குகள் அடாத்தாக நடப்பதை அனுமிக்க முடியாது. அங்கு விகாரையொன்று அமைக்கப்பட்டால், அப்பகுதியிலுள்ள முஸ்லிம்களின் காணிகள் பறிபோகும். அவர்கள் அத்திவாரமிடுவதற்காக எனது காணியில் தோண்டிய குழிகளை வைத்துப் பார்க்கும் போது, பாரிய கட்டடமொன்றை அவர்கள் அங்கு நிர்மாணிக்கவுள்ளனர் என்பதை அனுமானிக்க முடிகிறது.

எமது காணிப்பத்திரத்தை அங்கிருந்த பொலிஸாரிடம் காட்டி, காணி உரிமையை நிரூபிக்க முயற்சித்தபோது, பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிடுமாறும், பிரதேச செயலகத்துக்குச் செல்லுமாறும் அவர்கள் கூறினார்களே தவிர, அடாத்தாக உள்நுழைந்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சிக்கவில்லை.

நடந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். குறித்த சம்பவம் நடந்த அன்றிரவு எனக்கு தெரியாத பல தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்புகள் வந்தன. சிலர் என்னை அச்சுறுத்தும் வகையில் பேசினார்கள்” என்றார்.   

தொடர்பான செய்தி: பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்