பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 43 வருடங்களுக்குப் பின்னர் திருத்தம்: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

🕔 January 28, 2022

நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன், திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், இறுதி அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் அதனை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக ராஜதந்திர அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

என்ன திருத்தங்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளில் திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்று நிறுவப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்