கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

🕔 January 24, 2022

– யூ.எல். மப்றூக் –
(பிபிசி தமிழுக்காக)

ரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரம் 06க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 06க்குரிய இஸ்லாம் (தமிழ் மொழி), தரம் 07க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குரிய இஸ்லாம்(தமிழ் மொழி), தரம் 11க்குரிய இஸ்லாம் (தமிழ் மொழி) ஆகிய புத்தகளையே மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறும், சிலவேளை புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அவற்றினை மீளப்பெறுமாறும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் புத்தகங்களை பயன்படுத்தும் மாணவர்களிடமிருந்து அவற்றினை மீளப்பெறுமாறும், மீள்பயன்பாட்டுக்காக மாணவர்களுக்கு வழங்க வேண்டாம் எனவும், கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட நூல்களுக்குப் பதிலாக, புதிய திருத்தப்பட்ட நூல்களை வழங்குவதற்கு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுக்கு அமைவாகவே, மேற்படி புத்தகங்களின் விநியோகத்தினை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக தேசிய பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு – கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியை அண்மையில் ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இந்த செயலணி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் எண்ணக்கருவுக்கு அமைவான கருத்துக்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்று வருகின்றது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி மறுப்பு

இந்த நிலையில் மேற்சொல்லப்பட்ட பாடநூல்களை விநியோகிக்க வேண்டாமென, தாம் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்றும் அவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அஸீஸ் நிஸாருத்தீன்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு, அறிக்கையொன்றினைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதே தவிர, யாருக்கும் ஆணையிடும் அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறினார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தான் கலந்து கொண்டதாகக் கூறும் அஸீஸ் நிஸாருத்தீன், எந்தவொரு கூட்டத்திலும் இஸ்லாம் பாடப்புத்தக விவகாரம் தொடர்பில் பேசப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில், அரச பாடசாலைகளில் வழங்கப்படும் இஸ்லாம் பாடத்துக்கான புத்தகங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. பாடசாலைகளில் வழங்கப்படும் இஸ்லாம் பாடப் புத்தகங்களில் தீவிரவாதத்தைக் கொண்ட விடயம் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்ட நிஸாருத்தீன், “அதில் உண்மையும் இல்லாமலில்லை” என்றார்.

பாடநூல்களில் தீவிரவாதமா?

“ரஊப் மௌலவி என்பவர் இஸ்லாம் மதம் சார்ந்து சில கருத்துக்களைக் கூறி வருகிறார். அவரின் கருத்தை ஏற்பவர்களும் உள்ளனர், மறுப்பவர்களும் இருக்கின்றார்கள். ரஊப் மௌலவியின் கருத்தை நான் முற்றாக நிராகரிப்பவன். அதற்காக ரஊப் மௌலவியை கொல்ல வேண்டும் என்கிற கூற்றுடன் எனக்கு உடன்பாடில்லை”.

“ஆனால் ரஊப் மௌலவி என்பவர் ‘முர்தத்’ (இஸ்லாத்தை விட்டும், மதம் மாறியவர்) என்கிற ‘பத்வா’ வை (தீர்ப்பை) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 1978ஆம் ஆண்டு வழங்கியது. அதேவேளை, இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் ‘முர்தத்’ (இஸ்லாத்தை விட்டு மதம் மாறியவர்) கொல்லப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக, படிக்கின்ற மாணவர்களின் மனதில் திட்டமிட்டு தீவிரவாதமொன்று விதைக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது என, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் கூறப்பட்டுள்ளது” என்கிறார் அஸீஸ் நிஸாருத்தீன்.

“இவ்வாறான விடயங்களை வைத்தே, இஸ்லாம் பாடப்புத்தகங்களில் தீவிரவாதம் உள்ளதாக, ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் இவ்விடயம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை” எனவும் நிஸாருத்தீன் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலை விசாரித்த ஆணைக்குழுவின் சிபாரிசு

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், பாடசாலைகளில் வழங்கப்படும் சமயக் கல்விக்குரிய பாடப்புத்தங்கள் தொடர்பில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்வி (Education) எனும் தலைப்பின் கீழ் அந்தப் பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றில் ‘தேசிய, மாகாண மற்றும் சர்வதேச பாடசாலைகளின் மாணவர்களுடைய பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்ட அனைத்து சமயக் கல்விப் புத்தகங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் தீவிரவாத அல்லது பயங்கரவாத இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்’ என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்னோரிடத்தில், ‘தீவிரவாத போதனைகள் மற்றும் தீவிரவாத எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளை கண்டறிந்து அகற்றும் நோக்கில், இலங்கையில் இஸ்லாமிய கல்விப் புத்தகங்களின் உள்ளடக்கங்களை உடனடியாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்’ எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

‘எந்தவொரு தீவிரவாத அல்லது பயங்கரவாத உள்ளடக்கத்தையும் கண்டறிந்து அகற்ற, அனைத்து கல்வி வெளியீடுகளும் ஓர் ஒழுங்குமுறை அமைப்பால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ எனவும், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் சிபாரிசு

இது இவ்வாறிருக்க தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் 2020ஆம் ஆண்டின் அறிக்கையொன்றிலும், இஸ்லாம் பாடப்புத்தகங்களை மறுசீராய்வு செய்வதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நட்புறவை கட்டியெழுப்பியவாறு, புதிய பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வேரோடு களைந்தெறிவதற்குத் தேவையான வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திட்டங்களைத் தயார் செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் பற்றிய அந்தத் திட்ட அறிக்கையில்; இஸ்லாம் பாடப்புத்தகங்களில் எவ்வகையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

‘இஸ்லாம் கல்வியுடன் தொடர்புடைய பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், பாடப்புத்தகங்களை உருவாக்கும் நடைமுறையை மீள்பரிசீலனை செய்து, தீவிரவாத அல்லது மதப் பிரிவுகளைச் சார்ந்த கருத்துக்கள் உள்ளடங்குவதற்கான வாய்ப்பினை இல்லாதொழித்தல் வேண்டும்’ என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘எதிர்காலத்தில் வெளியிடப்படுகின்ற இஸ்லாம் பாடப்புத்தகங்களை தொகுப்பதற்கு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விமான்கள் குழுவொன்றை நியமித்தல் வேண்டும்’ எனவும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்