சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

🕔 December 27, 2021

மாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம் (WAGE ) நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் பல்வேறு ஆயத முரண்பாடுகள், போர்கள் நடந்திருந்தாலும் சமாதான முன்னெடுப்புக்களிலும் நல்லிணக்கங்களிலும் பெண்களின் வகிபாகம், பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இலங்கையில் காலாகாலமாக இனங்களுக்கிடையே இன முறுகலும் முரண்பாடுகளும் கலவரங்களும் ஏற்பட்டுள்ளன.

எனவே, இன்றைய காலகட்டத்தில் நல்லிணக்கத்திலும் சமாதானத்திலும் பெண்கள் வினைத்திறனான பங்களிப்பைச் செய்வது மிகவும் முக்கியமாகும் என உணரப்பட்டுள்ளது.

ஆகவே பெண்களை வலுப்படுத்தி, சமாதான முன்னெடுப்புக்களில் அவர்களை பங்குபெற வைப்பதற்கும் அவர்களுடைய திறனை விருத்தி செய்வதற்குமாக – ‘சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல்“ (WAGE ) எனும் திட்டம் அம்பாறை, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய 03 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தும் (WAGE ) திட்டத்தில் – பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவும் அங்கம் வகிக்கின்றது.

மாவட்ட அளவில் செல்வாக்கு மிக்க, அதிகாரம் கொண்ட அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்களான வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், மத தலைவர்கள், வங்கி மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்படி குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமே, அண்மையில் (22 டிசம்பர்) அம்பாறை – மொன்டி ஹோட்டலில் நடைபெற்றது.

கூட்டுச் செயற்திட்டங்களின்மூலம் அடையாளம் காணப்பட்ட உள்ளுர் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதும், பரிந்துரைகளை முன்வைப்பதும், பெண் தலைவர்களுடன் இணைந்து தங்களது ஒத்துழைப்பை வழங்குவதுமே இப்பணிக்குழுவின் நோக்கமாகும்.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஆலோசகர் நளினி ரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அந் நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட இணைப்பாளர் சகுந்தலை, பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின் ( AWF) இணைப்பாளர் வாணி சைமன், சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE) திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன் மற்றும்பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின்(AWF) உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்