காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 December 22, 2021

– சரவணன் –

ட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக காணிப் பத்திரம் தொடர்பாக – ஆசிரியர்கள் உட்பட பலரிடம் லஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றைப் பெற்றுதருவதாகச் கூறி, 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறையிட்டதையடுத்து, அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான இன்று பகல் – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து, அவர் கேட்ட 02 லட்சம் ரூபாவை லஞ்சாமாக கொடுத்துள்ளார். இதன்போது அங்கு வந்திருந்த லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர், குறித்த உத்தியோகத்தரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்