ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது
ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள நீதிபதியின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) நடைபெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் – விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) அதிகாலை 2.00 மணியளவில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 04 பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக அரச புலனாய்வு பிரிவினர் தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட விசாரணை பிரிவினர் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி. கருணாகரனின் வீட்டில் நேற்று (18) அதிகாலை 02 மணியளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள வீட்டுக்கு அருகிலிருக்கும் தென்னை மரம் மீதேறி, வீட்டின் இரண்டாம் மாடிக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நீதிபதியின் மனைவியின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதன்போது கொள்ளையர்களை தடுக்க முற்பட்ட நீதிபதியும் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது நீதிபதிக்கு கை மற்றும் கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நன்றி: நியூஸ் பெஸ்ற்